தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை உள்ளது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்த வேட்பாளர் பட்டியலுக்குக் கட்சியிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் காரணமாகக் காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் தான் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடந்த சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட உத்தேசப் பட்டியலில் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும், தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தான் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று (02.04.2026) இரவு 8 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று இரவு நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
