– நமது நிருபர் –
தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., விரும்பும் தொகுதிகளை காங்கிரசும்; காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தே.மு.தி.க.,வும் விரும்புவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்ற ஓரிரு தொகுதிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்பதாலும் இழுபறி நீடிக்கிறது.
தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகள், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் வென்ற 17 தொகுதிகளில் விருத்தாசலம், தென்காசி ஆகிய தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கவில்லை. மற்ற 15 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. விருத்தாசலம் தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிட விரும்புவதால், அத்தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.
தென்காசியில், முன்னாள் மாவட்ட தி.மு.க., செயலர் பத்மநாபன் போட்டியிட விரும்புவதால், அத்தொகுதியையும் காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. தென்காசிக்கு பதிலாக காங்கிரசுக்கு கடையநல்லுார் தொகுதி ஒதுக்கப்படுகிறது. நான்குநேரி தொகுதியில், தி.மு.க., சார்பில் கிரகாம்பெல் போட்டியிட விரும்பிய போதிலும், காங்கிரஸ் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அங்கு, மீண்டும் காங்., பொருளாளர் ரூபி மனோகரன் போட்டியிட விரும்புகிறார்.
விளவங்கோடு தொகுதியை, மா.கம்யூ., கேட்கிறது; காங்கிரஸ், விட்டுக்கொடுக்க மறுக்கிறது. ஸ்ரீபெரும்புதுார் தொகுதியை மீண்டும் பெற, டில்லி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. டில்லி மேலிடத்தில் ஒப்புதல் பெற்ற பின், முடிவை சொல்வதாக, காங்கிரஸ் குழு தெரிவித்துள்ளது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “கடந்த தேர்தலில் எங்களுக்கு வழங்கிய 28 தொகுதிகளில், 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து பேச்சு நடத்துகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வசம் உள்ள 3 தொகுதிகளில், ஒரு தொகுதியை, தி.மு.க., கேட்பதால் பேச்சு நடத்தி வருகிறோம். மிக விரைவில் தொகுதிகள் அடையாளம் காணப்படும்,” என்றார்.
இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., – கொ.ம.தே.க., – இ.கம்யூ., – ம.தி.மு.க., தமிழர் தேசம் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ., – ம.ஜ.க., ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.
காங்கிரஸ், தே.மு.தி.க., மா.கம்யூ., கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்படவில்லை. எனினும், ஓரிரு நாளில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியலை, 29ம் தேதி வெளியிடுவதாக, அக்கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
