காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் மோதல்; கேரள பிரச்சாரத்தில் பரபரப்பு

கேரளத்தில் வரும் வியாழக்கிழமை (09-04-26) அன்று சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மாநில தலைவர்கள் மட்டுமன்றி தேசிய தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், காங்கிரஸ் சார்பில் நடிகர் ரமேஷ் பிஷாரடி, இடதுசாரி கூட்டணி சார்பில் ரசாக் மற்றும் பாஜ கூட்டணி சார்பில் சோபா சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பிஷாரடி வடக்குந்தரை பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.  

அப்போது திடீரென அங்கு வந்த பெண்கள் உட்பட பாஜக தொண்டர்கள் இந்தப் பகுதிக்குள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று கூறி ரமேஷ் பிஷாரடியை தடுத்தனர். இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் பாஜவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரமேஷ் பிஷாரடி அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு  முதல்வர் பினராயி விஜயன் உள்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link