புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 20 வருடங்ளாக திமுக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சிகளுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டு முழுவதும் கட்சி தொண்டர்கள் களப்பணி செய்து தி.மு.கவை வளர்த்து வைத்திருந்தாலும் கடைசியில் கூட்டணி கட்சிகளுக்கே கொடுப்பதால் விரக்தியடைந்துள்ளனர். இதனால் இந்த முறை தி.மு.க வின் உதயசூரியன் சின்னத்தில் அறந்தாங்கி தொகுதி மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் இல்லை என்றால் அறிவாலயம் சென்று கடுமையாக போராடுவோம் என்று கடந்த 2024 நாடடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன், மெய்யநாதன் ஆகியோரிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவுடையார்கோயில் திமுக ஒன்றிய செயலாளருமான உதயம் சண்முகம் மேடையில் பேசி கோரிக்கை வைத்தார்
அதற்கு மாவட்டச் செயலாளரான ரகுபதி, உங்கள் கோரிக்கை நியாயமானது தலைமை கவனத்திற்கு கொண்டு சென்று வாய்ப்பை பெற்றுத்தருவோம் என்றார். அதே போல அறந்தாங்கி தொகுதியில் உள்ள தி.மு.க அனைத்து நிர்வாகிகளும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் கோரிக்கை வைத்தனர். மண்டல பொறுப்பாளர் அமைச்சர் நேரு நடத்திய நேர்கானலிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். அமைச்சர் நேரு கோரிக்கையை தலைமைக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
இந்த நிலையில் தான் தற்போது அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்தால் திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நடத்திய நேர்கானலின் போது, திமுக மீண்டு ஆட்சிக்கு வர வேண்டும் அதனால் கூட்டணிக்காக களப்பணி செய்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் திமுகவினரை மதிப்பதில்லை. அமைச்சர்களை கூட விழாக்களுக்கு அழைக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார். இணக்கமான உறவில் இல்லை என்று திமுகவினர் கூறினர். இறுதியில் அறந்தாங்கி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவினர் இன்னும் அதிருப்தியிலேயே உள்ளனர்.
இந்த நிலையில் தான் மாஜி சட்டமன்ற உறுப்பினரும், ஆவுடையார்கோயில் ஒன்றியச் செயலாளருமான உதயம் சண்முகத்தின் மகன் முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த சரண் (எ) சிவசங்கர் விரக்தியில் த.வெ.க வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தயாராகி உள்ளார். இதனால் அறந்தாங்கி தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. இது குறித்து சரண் நம்மிடம், ‘நான் திமுக உறுப்பினர் தான். இருந்த கட்சி பதவியையும் பறித்துக் கொண்டார்கள். ஆனாலும் தொடர்ந்து கட்சிக்காக களப்பணி செய்து வந்தேன். இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னம் நம் தொகுதியில் போட்டியிடும் என்று நம்பினோம். ஆனால் கூட்டணிக்கே கொடுத்துவிட்டார்கள். எனக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ளவர் குடும்பத்தை பிடிக்கவில்லை. அதே போல பாஜகவும் பிடிக்கவில்லை. அதனால் தவெகவிற்கு வாக்கு சேகரிக்க போகப் போறேன். ஆனால் அந்தக் கட்சியில் சேரவில்லை. 4 ந் தேதி தவெக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலில் தொடங்கி தேர்தல் முடியும் வரை தவெகவிற்காக வாக்கு சேகரிப்பேன். திமுக உறுப்பினராக தொடர்வேன். காங்கிரஸ் வேட்பாளரை பிடிக்காததால் இந்த முடிவு’ என்றார். திமுக மாஜியின் மகன் திமுகவில் இருந்து கொண்டே தவெகவிற்கு தேர்தல் பணி செய்ய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
