காங்., வேட்பாளர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய மாட்டாரா சிதம்பரம்?

கோவை: கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சுற்றுப்பயண பட்டியலில், அந்தக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் விடுபட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்.கட்சிக்கு கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூர்யபிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை விடுத்து, புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் வழங்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழுபறியாக இருந்த தி.மு.க. காங். கூட்டணி அமைய அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவர் பரிந்துரை செய்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சிதம்பரம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சுற்றுப்பயண விவரம்

இதற்கிடையே தி.மு.க. தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் வருகிற 14ம் தேதி ஈரோடு, கோவையில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோவையில் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, சூலூர் ஆகிய 3 தொகுதிகளில் சிதம்பரம் பிரசாரம் செய்வார் என்று கூறியுள்ளனர். இதில் காங். போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் இடம் பெறவில்லை. இது அந்த கட்சியின் வேட்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காங். வேட்பாளர் தொகுதி பிரசாரத்துக்கு எதிர்ப்பு

காங். வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.வினர் சிதம்பரத்துக்கு நேரடியாக அழைப்பு விடுத்திருப்பார்கள். பயண திட்டம், நேரம் குறித்து தெரியவில்லை. தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் இல்லை என்பதால் அவர் அங்கு பிரசாரம் செய்வது சந்தேகம் தான். ஒருவேளை காங். வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தால் அவர் அதை பரிசீலனை செய்யலாம். ஆனால் அந்த தொகுதிகளில் சிதம்பரம் பிரசாரம் செய்வதற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Source link