சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ‘பேட்டரி பேக்’ ஆலை அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே எலக்ட்ரிக் நிறுவனம், மல்டி போல் கனெக்டர்ஸ், கோ ஆக்சியல் கனெக்டர்ஸ், பல்வேறு மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக, ஹிரோசே எலக்ட்ரிக் சென்னை பிரைவேட் லிமிடெட் உள்ளது.
இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மின்சார மற்றும் மின்னணு கனெக்டர்ஸ் தயாரிப்பு ஆலை அமைக்க முன்வந்துள்ளது. இதன்வாயிலாக, 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தலைமை செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண் ராய், ஹிராசே உற்பத்தி குழுமத்தின் தலைவர் யோஷிஹிரோ குன்சி, ஆசிய தயாரிப்பு குழும தலைமை செயல் அலுவலர் கணேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
