சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான கட்டுமான பணிகளில், ஆகம விதிகள் மீறப்பட்டு உள்ளதா என, ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி, மாநில அளவிலான நிபுணர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராய என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில், கும்பாபிஷேகத்துக்கான பணிகள் புராதன சின்ன ஆணைய ஒப்புதல் பெறாமலும், ஆகம விதிகளை பின்பற்றாமலும் நடந்து வருகின்றன.
‘எனவே, கட்டுமான பணிகளுக்கு பெறப்பட்ட ஒப்புதல்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
எதிரானது அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கே.சீனிவாசன் ஆஜராகி,”தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில், தற்போது நடக்கும் பணிகள் ஆகம விதிகளுக்கு எதிரானது. கருவறைக்குச் செல்ல, மரத்தால் ஆன ஆறு படிகள் இருந்த நிலையில் தற்போது, 10 படிகளாக மாற்றப்பட்டு உள்ளது.
”கோவில் மேற்கூரையில் தங்க பல்லி இருந்த நிலையில், தன் உயரத்தை குறைத்து, ‘பால்ஸ் சீலிங்’ அமைக்கப்பட்டு, தங்க பல்லி வைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.
அறநிலையத்துறை தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டதாவது:
தொல்லியல் துறை தலைவர் உள்ளிட்டோருடன், மாநில அளவிலான நிபுணர் குழு, பல கூட்டங்களை நடத்தியபின், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முடங்கின கோவிலில் உள்ள படிகள், 1.5 அடி உயரமாக இருப்பதால், அதில் ஏற பக்தர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக, சாய்தள பாதை அமைக்கப்பட்டு உள்ளது. படியில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தடுக்கப்படவில்லை.
பல்லி உயரம் குறைக்கப்பட்டது ஆகம விதிகளுக்கு முரணானது அல்ல. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பணிகள் முடங்கி உள்ளன.
நடந்து வரும் பணிகளுக்கு, இரண்டு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. சேதமான கோவில் சுவரோவியங்கள், தொன்மை மாறாமல் மீட்டெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் வாதிட்டார். பின், ஆகம நிபுணர்கள் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கோவிலில் சுவரோவியங்கள் உள்ளன. இதை பார்க்கும்போது, தொல்பொருள், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கோவில் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது நடந்து வரும் பணிகள் ஆகம விதிகளை மீறும் வகையில் உள்ளனவா என்பதை, ஆகம, தொல்லியல் துறை நிபுணர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
எனவே, ஆகம நிபுணர்கள், தொல்லியல் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை, மாநில நிபுணர் குழு நியமிக்க வேண்டும். அந்த துணைகுழு வாயிலாக, ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்.
பரிந்துரை குறிப்பாக, ‘பாஞ்சராத்ர ஆகமத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் கட்டாயம் உறுப்பினராக இடம் பெற வேண்டும். ஆய்வு தேதியை நிர்ணயித்து, கோவிலில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதுகுறித்து மனுதாரருக்கும், மாநில அளவிலான நிபுணர் குழு தெரிவிக்க வேண்டும்.
இந்த துணை குழு, அனைத்து தரப்பு ஆட்சேபனைகளை ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை தொடரலாம். எதையெல்லாம் தொடரக்கூடாது; எவற்றை மாற்றி அமைக்கலாம் என, மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைத்து, அறிக்கை அளிக்க வேண்டும்.
அந்த அறிக்கையின்படி, எந்தெந்த பணிகளை தொடர வேண்டும் என, மாநில குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
