காதலனுக்கு கொடுத்த நகைகளை திருப்பி கேட்டதால் தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி கைது

நாகர்கோவில்:

நாகர்கோவில் பிள்ளையார்புரம் அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். அவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியிலும், இரண்டாவது மகள் சுருதி (வயது 19) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டும் படித்து வருகிறார்.

மாணவி சுருதி, தனது கல்லூரியில் தன்னுடன் படிக்கும் திங்கள்சந்தை அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (19) என்ற மாணவரை காதலித்துள்ளார். இந்தநிலையில் கலாவதி வைத்திருந்த 10 பவுன் நகைகள் மாயமானது.

இதுகுறித்து சுருதியிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் அபிலாஷ் அவசர தேவைக்காக பணம் கேட்டதால், நகைகளை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலாவதி, நகைகளை திருப்பி வாங்கித் தருமாறு கேட்டு மகளிடம் தகராறு செய்தார்.

அவர் நகையை திருப்பி வாங்கித்தராததால் தாய்-மகளுக்கிடையே தினமும் தகராறு நடந்து வந்திருக்கிறது. இதற்கிடையே சுருதியின் வீட்டுக்கு அபிலாஷ் நேற்று வந்தார். அவரிடம் கலாவதி, நகைகள் எங்கே? என்று நேரடியாக கேட்டிருக்கிறார்.

அதில் ஆத்திரமடைந்த அபிலாஷ், உருட்டு கட்டையால் கலாவதியின் பின் தலையில் தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அபிலாஷ் மற்றும் சுருதி ஆகிய இருவரும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கலாவதியை கொல்ல முயன்றனர்.

அதே நேரத்தில் கலாவதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது சுருதி தனது காதலனுடன் சேர்ந்து தாய் கலாவதியை கொல்ல முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கலாவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அபிலாஸ் மற்றும் சுருதி ஆகிய இருவரின் மீதும் சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தனர். விசாரணைக்கு பின் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சுருதி தக்கலை கிளை சிறையிலும், அபிலாஷ் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Source link