புதுடில்லி: டில்லி சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தை ஒட்டி, தன் காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளார்.
டில்லியில் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் பறித்தது தொடர்பாக கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம்
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்திலும் இவர் சிக்கினார்.
பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சுகேஷ், தற்போது டில்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில், ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் தீவிரமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாகவும் தகவல் வெளியாகின.
இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் ஜாக்குலின் சிக்கியுள்ளார். ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று அவர் மறுத்து வருகிறார்.
இதற் கிடையே, சிறையில் இருந்தாலும் காதலி ஜாக்குலினுக்கு, கடிதம் எழுதுவதையும், சொகுசு படகு, ஜெட் விமானம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அனுப்புவதையும் சுகேஷ் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஜாக்குலினுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஏர் பஸ் – ஹெச்’ ரக ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கிஉள்ளார் சுகேஷ்.
ஹெலிகாப்டரின் முகப்பில், ஜாக்குலின் பெர்னாண்டசின் முதல் இரு எழுத்துகளை பிரதிபலிக்கும், ‘ஜே.எப்.’ என, முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாக சுகேஷ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உடைக்க முடியாது
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
காதலர் தினத்தின் மென்மையான ஒளியில், உலகம் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையவில்லை. வார்த்தைகளால் மட்டுமே பிடிக்க முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது.
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும், இருவருக்கும் இடையேயான துாரத்தை நினைவூட்டுகிறது. எது நடந்தாலும், நம் இருவருக்கும் இடையிலான உறவை யாராலும் உடைக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுகேஷின் பரிசு தொடர்பாக, கேட்டபோது ஜாக்குலின் பதிலளிக்கவில்லை.
