காந்திநகர்: குஜராத்தில், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை திறம்பட மேற்கொள்ளவும்,

காந்திநகர்: குஜராத்தில், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை திறம்பட மேற்கொள்ளவும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் விசாரணைக்கு உதவுவதற்காக, ‘நரிட்’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வடிவமைத்துள்ளனர்.

இந்த மென்பொருள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்து, வழக்கின் தற்போதைய சட்ட நிலையை ஆய்வு செய்யும். அதன்பின் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட கூடிய வாதங்களை கணித்து அதற்கு எதிர்வாதங்களையும் பரிந்துரைக்கும்.

விசாரணை அதிகாரிகள் முதல் தகவலறிக்கையை பதிவேற்றினால், அதை ஆய்வு செய்து வழக்கின் குறைகள், சட்ட ரீதியான சிக்கல்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஆதாரங்கள் சரிபார்ப்பு பட்டியல் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை வழங்கும்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ”முன்பு, இத்தகைய விசாரணைகள் நிபுணத்துவ போலீசாரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதனால் தாமதங்கள் ஏற்பட்டன. தற்போது இந்த ஏ.ஐ., மென்பொருள் அனைத்து அதிகாரிகளுக்கும் உதவியாக இருக்கும். நடைமுறை பிழைகளை தவிர்க்கவும், விசாரணை தரத்தை மேம்படுத்தவும் உதவும்,” என்றனர்.

Source link