காபூல்: எல்லையில் நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; பாக்டிகா, பாக்தியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனர் மற்றும் நுரிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலிபான் படைகள் பதில் தாக்குதல் நடத்தின. நேற்றிரவு 4 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில், 2 பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மற்றும் 19 எல்லை போஸ்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.
55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். சிலர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் ஒரு டேங்க் அழிக்கப்பட்டது மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் 8 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
மொத்தம் 2,611 கிலோமீட்டர் நீளமுள்ள டியூரண்ட் கோடு எல்லைப் பகுதியில் நீண்டகாலமாகவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
