காபூல்: பாகிஸ்தானுடனான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் தங்கள் தேர்வல்ல என்றும் தேவைப்பட்டால்

காபூல்: பாகிஸ்தானுடனான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் தங்கள் தேர்வல்ல என்றும் தேவைப்பட்டால் நீண்டகால போருக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல், சமீபகாலமாக முற்றியுள்ளது. டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கன் அரசு ஆதரவளிப்பதாக பாக்., குற்றம் சாட்டி வருகிறது.

இதையடுத்து கடந்த வாரம், ‘ஆப்பரேஷன் கஜப் லில் ஹக்’ என்ற பெயரில், ஆப்கானிஸ்தான் எல்லையில், 53 இடங்களில் பாக்., பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக தலிபான் படைகளும் தாக்குதல் நடத்தின. இதில், இருதரப்பிலும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானுடன் நேரடி போர் துவங்கியதாக பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார்.

இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், போர் எங்கள் தேர்வல்ல என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் கூறியதாவது:

நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், தேவை ஏற்பட்டால் நீண்ட கால போருக்கு தயார் நிலையில் இருக்கிறோம். ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது.

சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாமல், பாகிஸ்தானுக்கு தனியாக ஒரு நாட்டை தாக்கும் திறன் இல்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், காபூலில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தை மூடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போரால் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்; வர்த்தகம் முடங்கியுள்ளது. இருநாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தலிபான் அரசு நீண்டகால போருக்கு தயார் என்று அறிவித்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான தளம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானதளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தற்போது தலிபான் அரசின் மிக முக்கியமான ராணுவ சொத்துக்களில் ஒன்றாக இது கருதப் படுகிறது. இந்த தாக்குதல், செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

Source link