புதுடில்லி: ‘ஆம் ஆத்மி தலைமை என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. காயம்பட்டவன் என்பதால், நான் மிகவும் ஆபத்தானவன்’ என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சத்தா எச்சரித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர் ராகவ் சத்தா. இவர், அக்கட்சியின் ராஜ்யசபாவின் துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர், சமீப காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் நீக்கப்பட்டார்.
இது குறித்து ராஜ்யசபா செயலகத்துக்கு, ஆம் ஆத்மி அளித்த கடிதத்தில், ‘பார்லி.,யில் ராகவை இனி பேச அனுமதிக்க வேண்டாம்’ என, வலியுறுத்தியது. இதற்கிடையே, ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அனுராக் தாண்டா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ராகவ் மீது குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை தன் சமூக வலைதள பக்கத்தில் ராகவ் நேற்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொய்கள் நிறைந்த இந்த ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு பதில் சொல்வது அவசியம். நான் செய்த மூன்று தவறுகளின் காரணமாகவே என்னை பார்லி.,யில் பேச விடாமல் தடுத்ததாக கூறுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த போதெல்லாம், அவர்களுடன் சேராமல் நான் அமர்ந்திருந்ததாக சொல்கின்றனர். அப்படி நடந்த சம்பவத்தை யாராவது காட்டுங்கள் என சவால் விடுகிறேன். இது என் மீது சுமத்தப்பட்ட அப்பட்டமான பொய். இதற்கு, பார்லி.,யில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளே சாட்சி.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான மனுவில் நான் கையெழுத்திட மறுத்தேன் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த யாரும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் 10 பேரில், ஆறேழு பேர் அதில் கையெழுத்திடவில்லை. என்னை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்?
பிரதமர் மோடிக்கு பயந்து அர்த்தமற்ற பிரச்னைகளை பார்லி.,யில் எழுப்பியதாக மூன்றாவது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரகளை செய்யவோ, கூச்சலிடவோ, மைக்கை உடைக்கவோ நான் பார்லி., செல்லவில்லை.
மக்கள் பிரச்னையை பேசதான் அங்கு சென்றேன். ஜி.எஸ்.டி., முதல் வருமான வரி வரை, பஞ்சாபின் தண்ணீர் முதல் டில்லியின் மாசடைந்த காற்று வரை, கல்வி முதல் சுகாதாரம் வரை, ரயில் பயணியரின் துயரம் முதல் மாதவிடாய் சுகாதாரம் வரை பல முக்கிய பிரச்னைகளை நான் எழுப்பியுள்ளேன்.
இதற்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக நான் செய்த பணிகளே சாட்சி. என் மீது சுமத்தப்பட்ட அனைத்து பொய்களும் அம்பலப்படுத்தப்படும். அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் பதிலளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில், சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தில் இடம்பெற்ற வசனமான, ‘காயம்பட்டவன் என்பதால், நான் மிகவும் ஆபத்தானவன்’ என, எச்சரித்து, தன் பேச்சை ராகவ் சத்தா நிறைவு செய்தார். இந்த பதிலடி காணொளியால், ஆம் ஆத்மியில் நிலவும் உள்கட்ட பூசல் தீவிரமடைந்துள்ளது.
