காயமடைந்த மாணவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு.. கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது: ஆ. ராசா கடும் சாடல் – dmk mp a raja alleges denial of permission to meet students injured in the delhi police lathi charge

டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ள சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. அதோடு போராட்டக்காரர்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக எம்பி ஆ. ராசா டெல்லியில் காவல்துறையால் தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்று நுழைவு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயற்சி செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்தினார்கள்.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல்துறையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூற திமுக எம்பிக்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன், கான்ஸ்டைன் ரவீந்திரன் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக எம்பி ஆ. ராசா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்டுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் வெகுண்டெழுந்து போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறையில் காயம் அடைந்த, மயக்கமடைந்த, பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை அறிந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய உறவினர்களை சந்தித்து ஆறுதல் வழங்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சொன்னார்கள்.

அதன்படி இன்றைய தினம் மருத்துவமனை கண்காணிப்பாளர்களை சந்தித்த நிலையில் பெரும்பாலானோர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று சென்று விட்டதாக சொன்னார்கள். ஓரிருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பார்க்க அனுமதிக்கும் சூழ்நிலை இல்லையென்று கூறினார்கள். அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தோம். உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களை சந்திப்பதற்கே சுகாதார துறை அமைச்சரிடம் இருந்து அனுமதி வேண்டுமென சொல்லப்பட்டது.

இந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளரிடம் பேசும்போது, அரசால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பது அவரின் வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொண்டோம். ஒரு நோயாளியை சந்திப்பதற்கு கூட ஒன்றிய அரசின் அமைச்சரை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் தான் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறோம் என ஆ. ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க போகிறது. அவர்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் போய் விட்டன. எனவே பாஜகவுடன் திமுக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பாஜக ஆட்சியை கொடுங்கோல் ஆட்சி என கடுமையாக விமர்சனம் செய்து ஆ. ராசா பேசியுள்ளார். இதனால் அவருடைய பேச்சு பெருமளவில் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

Source link