காயலான் கடைக்கு போகும் பழுதான பொருட்களாக அதிமுக- திமுக:சீமான் விமர்சனம்

காஞ்சிபுரம்: காயலான் கடைக்கு போகும், பழுதான பொருட்கள் போல, அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில், அவர் பிரசாரத்தில் பேசியதாவது:

இறைவனால் பேசப்பட்ட, வளமை கொண்ட தமிழ் மொழியும், இயற்கை அன்னையும் மரணப்படுக்கையில் இருப்பதை சகிக்க முடியாமல் மீட்க வந்தோம். நாட்டில், ஒரு கட்சி கூட, இயற்கை வளங்களான நீர், காற்று, மரம், மலை ஆகியவற்றின் நிலை குறித்து பேசுவதில்லை. அரசியலை, லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கின்றனர்.

தரமான கல்வி, நஞ்சில்லாத உணவு, மாசில்லாத காற்று, தரமான மருத்துவம் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஒரு நாட்டில் விவசாயி வாழ்ந்தால், நாடு வாழ்கிறது; விவசாயி சாகிறான் என்றால், நாடு அழிகிறது என்று பொருள். ஒரு மனிதன் உயிர் வாழ, 422 மரங்கள் வேண்டும். இங்கு, 28 மரங்கள் கூட இல்லை.

மாசு கலந்த காற்றை சுவாசித்து பலவித தொற்று நோய்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது. மினரல் வாட்டர் என்ற பெயரில், தண்ணீரில் இருக்கும் நன்மைகளை அழித்து, சத்து இல்லாத வெறும் தண்ணீரை குடித்து வருகிறோம்.

அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய, இரு கட்சிகளும் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்கின்றன. பழுதான பொருட்கள் காயலான் கடைக்கு போவது போல, அந்த கட்சிகள் உள்ளன. புதிய மாற்றத்தை உருவாக்கும் அரசியலால் தான் வரலாறு மாறும். யார் ஜெயிப்பார் என, ஓட்டளிக்காமல், யார் சரியானவர் என்பதை முடிவு செய்து மக்கள், ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link