திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காருக்குள் அமர்ந்து குடும்பத்துடன் தீக்குளித்ததில் கணவர் உடல் கருகி இறந்தார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், மானந்தவாடி பகுதியில் இருக்கும் எருமத் சாலையில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கடந்த 4ம் தேதி இரவு தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்த போது காருக்குள் ஐந்து பேர் உடல் கருகிய நிலையில் கிடந்தனர்.
அவர்களில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். பெண் உட்பட 3 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
நான்கு பேரையும் மீட்டு வயநாடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உடல் கருகி இறந்தவர் கண்ணுார் இருட்டிகுட்டா பகுதியைச் சேர்ந்த சுஜித் 42, என்பதும், மற்றவர்கள் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது. சுஜித்துக்கு பண பிரச்னை இருந்து வந்துள்ள நிலையில், குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்து காருக்கு ள் அமர்ந்து தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கார் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிஇருந்ததால், உடல் தீப்பற்றி எரிந்து வேதனையில் துடிதுடித்த போதிலும் காரை விட்டு வெளியே வர முடியவில்லை. மானந்தவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
