காரைக்குடி: ''வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை

காரைக்குடி: ”வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான், அங்கு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன். நான் சொல்வதை கேட்பதற்கு இனிக்கிறதா, இதுதான் காதில் தேன் ஊற்றுவது. ‘நீ எப்படி தர முடியும்’ என்று என்னிடம் கேட்க முடியுமா? மற்றவர்கள் எல்லாம் எப்படி 2,000 – 3,000 ரூபாய் கொடுப்பார்களோ, இலவச சிலிண்டர் கொடுப்பார்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன்.

மதுக்கடையை மூடுவேன், நல்ல கல்வி தருவேன், வேலை தருகிறேன் என்று எந்த கட்சியினருமே கூற மாட்டார்கள். வேலை இல்லையா 4,000 ரூபாய் தருகிறேன், படிப்பதற்கு 20 லட்சம் ரூபாய் கல்விக்கடன் தருகிறேன் என, அள்ளி விடுகின்றனர். அதற்கு, சிறந்த கல்வி நிலையத்தை ஏற்படுத்தி தரலாம். மதுக்கடையை மூடாமல், தமிழகத்தில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?

நான் ஆட்சிக்கு வந்ததும், பொது இடங்கள் தவிர மற்ற வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தமிழில் தான் பெயர் இருக்க வேண்டும். அனைவரும் துாய தமிழில் தான் பேச வேண்டும என்பதை கட்டாயமாக்குவேன். டில்லியில் சிறந்த ஆட்சி வாயிலாக, நல்ல கல்வியை வழங்கிய கெஜ்ரிவால் மீது சாராய ஊழல் என்று கூறினர். அரசியலில், நல்லவர்களை வர விடாமல் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

காரைக்குடியில், தேவர் சிலை அருகே நடந்த பிரசார கூட்டத்தில், இரவு 10:10 மணி வரை சீமான் பேசினார். தேர்தல் கமிஷன் விதிப்படி, இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பதால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Source link