காரை வழிமறித்த பெற்றோர்; கைவிரித்தார் அமைச்சர் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சென்ற காரை வழிமறித்து, பெற்றோர் கோரிக்கை வைத்த நிலையில், அவர்கள் கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வு காணாதது, பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சென்றார். அப்போது, அடையாறு காந்தி நகரில் உள்ள, குமாரராணி மீனா முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியரின் பெற்றோர், அவர் காரை வழி மறித்தனர்.

காரிலிருந்து இறங்கிய அமைச்சர் மகேஷிடம், ‘ மெட்ரிக் பள்ளியை இடிக்க போகிறோம். மாணவி யரை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என, பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது. தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதுகாக்க வேண்டும்’ என, கோரிக்கை வைத்தனர்.

அப்போது, ‘பள்ளி விவகாரம் குறித்து எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, சட்டசபையில் தெரிவித்தார். அப்படி ஏதும் நடக்காது என, பதில் அளித்துள்ளேன். பள்ளி முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்’ என கூறிவிட்டு சென்றார்.

பின், நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோதும், பெற்றோர் அவரை பின் தொடர்ந்தனர். அப்போது, ‘முதல்வரிடம் போய் பேசுங்கள்’ எனக்கூறிவிட்டு சென்றார்.

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளியாக உள்ள குமாரராணி மீனா முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளியாக மாற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப, எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கும்படி, பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது.

இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து, அமைச்சரிடம் தெரிவித்தோம். அவர், முதல்வரிடம் பேசுவதாக கூறினார். மீண்டும், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்கள், நிர்வாகம் எடுக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கின்றனர்.

மிகக்குறுகிய கால இடைவெளியில் பள்ளியை மூடப் போவதாக தெரிவித்தால், நாங்கள் எந்த பள்ளியில் சேர்க்க முடியும். அரசு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர். அமைச்சரை சந்தித்து முறையிட்டும், அவர் கைவிரித்து விட்டது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு உதவிபெறும் 654 பள்ளிகளில் ரூ.41.85 கோடியில் ‘ஹைடெக் லேப்’

தமிழகத்தில், 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில், 41.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை, சென்னை, அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியிலிருந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: ஒரு மாணவர், பெற்றோரிடம், ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’டை காட்டுவது போல், நான்கரை ஆண்டுகளில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் செய்யப்பட்ட சாதனைகளை முதல்வரிடம் காட்டினோம். ‘அதெல்லாம் சரி. அரசு உதவிபெறும் பள்ளிகளும் நம் பள்ளிகள்தானே. அவற்றுக்கு என்ன செய்தாய்?’ என, ஒரு தந்தையின் அக்கறையுடன், முதல்வர் கேட்டார்.
அதையடுத்து, தற்போது 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில், 41.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை இன்று திறந்துள்ளோம். இதனால், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link