கார்கோனே: 'உத்தர பிரதேசத்தில் நடந்த மஹா கும்பமேளா வாயிலாக புகழ்பெற்ற மோனாலிசா, ஒரு முஸ்லிம் நபரை திருமணம்

கார்கோனே: ‘உத்தர பிரதேசத்தில் நடந்த மஹா கும்பமேளா வாயிலாக புகழ்பெற்ற மோனாலிசா, ஒரு முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்டது, ‘லவ் ஜிஹாத்’ சம்பவம்’ என, அவரை திரைப்படத் துறையில் அறிமுகம் செய்த இயக்குநர் சனோஜ் மிஷ்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தி ன் மகேஷ்வர் நகரைச் சேர்ந்தவரும், நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்தவருமான மோனாலிசா போன்ஸ்லே, 2025ல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா வாயிலாக பிரபலமடைந்தார்

வசீகரிக்கும் கண்கள் மற்றும் அழகான புன்னகையுடன், ருத்திராட்சம் உள்ளிட்ட பொருட்களை விற்று வந்த அவரை, சமூக வலைதளங்கள் உலகப் புகழ் அடைய செய்தன. இதையடுத்து, பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளரும், இயக்குநருமான சனோஜ் மிஷ்ரா, தி டைரி ஆப் மணிப்பூர் படத்தில் நடிக்க மோனாலிசாவை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, நாகம்மா என்ற மலையாள படத்திலும் மோனாலிசாவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற அவர், அங்கு தன் காதலரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பர்மான் கான் என்பவரை, கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த திருமணத்துக்குப் பின், படப்பிடிப்பு நடக்கும் கேரளாவில் தன் கணவருடன் அவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த திருமணம் குறித்து அவரை திரைப்படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் சனோஜ் மிஷ்ரா நேற்று கூறியதாவது:

‘லவ் ஜிஹாத்’ எனப்படும், ஹிந்து பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, திருமணம் செய்து கொண்டு அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோனாலிசாவின் திருமணம் நடந்துள்ளது.

சமூக வலைதளம் வாயிலாக ஒன்றரை ஆண்டுகளாக பழகிய நபர், அவசர அவசரமாக அவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை வலையில் வீழ்த்துவதற்காகவே திட்டமிட்ட சதி அரங்கேறியுள்ளது.

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் நோக்கில் ஹிந்து பெண்களை குறிவைத்து ஏமாற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு சில அமைப்புகள் நிதியுதவி அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, மோனாலிசாவின் திருமணம் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில், அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ம.பி., முதல்வர் மோகன் யாதவை சந்திக்க இருக்கிறேன். ஹிந்து பெண் ஒருவர் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த அவரிடம் வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link