சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் தேர்போகி பாண்டி, காங்., சார்பில் மாங்குடி, த.வெ.க., சார்பில் டாக்டர் பிரபு, நா.த.க., சார்பில் சீமான் போட்டியிடுகின்றனர். சிவகங்கையில் தி.மு.க., கூட்டணியில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.
காங்., வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக தேவகோட்டை மற்றும் புதுவயலில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், காங்., – எம்.பி., கார்த்தி பேசுகையில், ‘சீமான் வெளியூர்காரர். அவருக்கு விபூதி பூசி அனுப்பி வைத்து விடுங்கள்’ என்று கூறினார்.
அவரது பேச்சு, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சீமான் வெளியூர்காரர் என்றால், கருணாசும் வெளியூர்தானே; அப்படியானால் அவரையும் நிராகரிப்பீர்களா’ என, அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
ஏற்கனவே சிவகங்கை தொகுதியை தங்களுக்கு ஒதுக்காத எரிச்சலில் உள்ள காங்., கட்சியினரும் தி.மு.க.,வினரும், கருணாசின் தேர்தல் பிரசார பணிகளில் அக்கறை காட்டவில்லை. வேறு வழியின்றி கருணாசும் தொகுதியில் தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
