காலத்துக்கேற்ப மாறிய பா.ம.க.,

ஜெ.ராம்கி,

ra****@***il.com

‘வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை’ என்ற கோஷத்தோடு தனித்து களமிறங்கிய பா.ம.க.,வுக்கு, 2016 தேர்தல் ஒரு முக்கியமான செய்தியை சொன்னது. பா.ம.க.,வின் ஆதார தளமான வன்னியர் ஓட்டு வங்கி சிதறவில்லை என்றாலும், தனித்து நின்று வெற்றி பெறுமளவுக்கு கட்சி வளரவில்லை என்பது தான் அந்த செய்தி. சரிவிலிருந்து மீண்டெழ, மறுபடியும் திராவிட, தேசிய கட்சிகளுடன் பா.ம.க., கூட்டணி சேர ஆரம்பித்தது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதில் வெற்றி, தோல்வியை தாண்டி கவனிக்க வேண்டிய விஷயம், பா.ம.க.,வின் ஓட்டு சதவீதம்.

கடந்த 2016ல் தனித்து நின்று 5 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெற்ற கட்சி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தும் 4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. சரிவிற்கான காரணம், ‘அன்னியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை’ என்பது தான்.

கூட்டணியின் கட்டாயத்தையும், அன்னியர் ஓட்டும் வேண்டும் என்ற கட்டாயத்தையும் உணர்ந்த அன்புமணி, தன் பாணியை மாற்றிக் கொண்டார். ஆனால், ராமதாஸ் மாறவில்லை.

இட ஒதுக்கீடு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை பிரதானப்படுத்தியே பா.ம.க.,வின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தன. அதை தாண்டி, பெரிய அளவில் அரசியல் செயல்பாடுகள் இருந்ததில்லை. ‘ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வரை சந்தித்து, பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன். ஆனாலும் பயனில்லை’ என்று, 10.50 சதவீதத்தை ராமதாஸ் அவ்வப்போது நினைவூட்டுகிறார்.

தி.மு.க., தலைமை மட்டுமல்ல அன்புமணியும் அதை ரசிக்கவில்லை. காரணம், இட ஒதுக்கீடு பற்றி பேசுவது, 2021ல் அ.தி.மு.க., கூட்டணிக்கு சரிவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பா.ம.க.,வை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தள்ளிவிட்டது.

அதனால் தான், அன்புமணி தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி பேசுகிறார். ‘முதலில் குடும்பத்தைப் பார், என் தம்பிகள் ஒரு வழக்கில் கூட சம்பந்தப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். ஐயாதான் உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்திக்கொண்டு, படித்து நல்ல வேலைக்கு செல்லுங்கள்’ என்று அறிவுரை சொல்கிறார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அனுபவம் அன்புமணிக்கு கைகொடுக்கிறது. அரசியலை தாண்டி மதுவிலக்கு, நீர் மேலாண்மை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பொது பிரச்னைகள் பற்றி பேசும் அரசியல் கட்சியாகவும் பா.ம.க., மாறி வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் தொடரும் ஒப்பந்த வேலை; ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 500 கோடி ரூபாய் சுருட்டல்; ஒரே ஆண்டில் 1.84 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிய தி.மு.க., என்று, ஒவ்வொரு நாளும் வெளியாகும் அன்புமணியின் அறிக்கைகளில் அக்னி தெறிக்கிறது.

தெளிவான கூட்டணி

தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்பதையெல்லாம் பா.ம.க., என்றோ மறந்துவிட்டது. வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுடன் இணக்கமான போக்கு என்பதற்கும் இனி வாய்ப்பில்லை.

விடுதலை சிறுத்தைகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகவே, சீனியர் ராமதாசுக்கு அறிவாலய கதவுகள் அடைக்கப்பட்டன. அதனால், எதிர் அணியான தே.ஜ., கூட்டணி பா.ம.க.,விற்கு அவசியமாகிறது. இதை ராமதாஸ் ஏற்க மறுக்கிறார்.

கடந்த 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தான்,- தந்தை — மகன் இருவருக்குமிடையேயான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்தது.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று ராமதாஸ் அறிவிக்க, அன்புமணியோ அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சில இடங்களில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட, ‘கிரீன் சிக்னல்’ தந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

கடந்த ஓராண்டாக தொடரும் தந்தை — மகன் மோதல், நிச்சயமாக கட்சியின் வளர்ச்சியை பாதித்துள்ளது. ஆனாலும், பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பின்னால் தான் அணிவகுத்து நிற்கின்றனர். மூத்தோரோ, ராமதாஸை, அன்புமணி அவமதித்து விட்டதாகவே நினைக்கின்றனர்.

இருப்பினும், அன்புமணி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ராமதாஸ் போல் குழம்பாமல், தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் அன்புமணி உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க., வுக்கு அடுத்தபடியாக தி.மு.க., ஆட்சியை விமர்சிப்பதில் அன்புமணி தான் முன்னுக்கு நிற்கிறார்.

தி.மு.க., அரசின் வாக்குறுதிகளின் நிலை பற்றி ‘விடியல் எங்கே?’ என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றையும் அன்புமணி வெளியிட்டார். தி.மு.க.,வின் 505 வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்பதை விரிவாக சுட்டிக்காட்டிய பின்னரே, தி.மு.க., அமைச்சர்கள் விளக்கம் தர ஆரம்பித்தனர்.

அ.தி.மு.க.,வால் மீண்டும் தே.ஜ., கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட அன்புமணி, வரும் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்று, பழனிசாமியை முதல்வராக்குவோம் என்கிறார். ஓ.பி.சி., பிரிவு மக்களுக்காக ரோகிணி ஆணையம் அமைத்த பிரதமர் மோடி தான் நிஜமான சமூக நீதியை கொண்டு வந்தவர் என்று, பா.ஜ.,வுடனும் நெருக்கம் காட்டுகிறார்.

இம்முறை, பா.ம.க.,விற்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தொகுதிகளில் சில குறைக்கப்பட்டாலும், தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட வலுவான தொகுதிகள் கிடைத்துள்ளன. வன்னியர் ஓட்டுகள், பா.ம.க., வசம்தான் இருக்கின்றன. அன்னியர் ஓட்டு இந்த முறை வருமா என்பதற்கும், பா.ம.க., முழுதும் அன்புமணி வசமிருக்கிறதா என்பதற்கும் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்!

Source link