காலம் கடந்ததால் காரைக்குடியில் 'விஜயின் மவுனம் பேசியதே'

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி த.வெ.க., வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அக்கட்சி தலைவர் விஜய் நேற்று வந்தார். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் பேசாமல் ‘ரோடு ேஷா’ மூலம் மவுனமாக பிரசாரம் செய்து விட்டு திரும்பினார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10:30 மணிக்கு பிரசார வேனில் விஜய் காரைக்குடிக்கு புறப்பட்டார். காரைக்குடி நகர் முழுவதும் வேனில் பயணித்தார்.

காரைக்குடிக்குள் விஜய் வாகனம் நுழைந்ததும், கையில் ‘விசில்’ சின்னத்தை ஏந்தியபடி சென்றார். வேட்பாளர் பிரபு, விஜய்க்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

கோவிலுார் நான்கு ரோடு சந்திப்பில் சென்றபோது தொண்டர்கள் வேல் வழங்கினர். அப்போது மர்ம பொருள் ஒன்று அவரது தலையில் விழுந்து சென்றது. மாவட்ட எல்லையான எஸ்.எஸ்.கோட்டையில் இருந்து காரைக்குடி வரை மக்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர்.

காரைக்குடி இன்கம்டாக்ஸ் ஸ்டாப்பில் இறங்கிய அவர், கல்லுாரி ரோட்டில் சில நிமிடம் சைக்கிள் ஓட்டிச் சென்றார். மீண்டும் வேனில் ஏற முற்பட்டபோது நெரிசலில் சிக்கி கொண்டார். விஜய் மீது பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வீசாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் ‘மப்டி’ போலீசார் ஈடுபட்டனர்.

வழி நெடுகிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அவர் காரைக்குடியில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்ட இடத்திற்கு மதியம் 2:34 மணிக்கு வந்தார். அவருக்கு பிரசாரம் செய்ய ஒதுக்கப்பட்ட மதியம் 12:00 மணி முதல் 2:30 மணியிலான நேரம் கடந்துவிட்டது.

அங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலையை வணங்கி, வேனில் 4 நிமிடம் நின்றபடியே மக்களை பார்த்து கைகளை அசைத்த விஜய் வேனிலேயே திருச்சிக்கு புறப்பட்டார்.

காரைக்குடியில் விஜய்யை பார்க்க 5 மணி நேரமாக காத்திருந்த நாகராஜன், சிவரஞ்சனி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மயங்கியது.

மாநகராட்சி அலுவலக மாடியில் ஏறி நின்ற தொண்டர்களை போலீசார் அகற்ற ↔தொடர்ச்சி கடைசி பக்கம் முற்பட்டபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விஜய் பிரசார பாதுகாப்பிற்கென சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என 850 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுகுறித்து வேட்பாளர் பிரபு கூறியதாவது: பிரசாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்து விஜய் தாமதமாக வந்ததால், பேசாமல் வேனில் இருந்தபடி கையசைத்து விட்டு சென்றார் என்றார்.

வாகனத்தில் சோதனை

சிங்கம்புணரி: மதுரை விமான நிலையத்தில் இருந்து பிரசார வேனில் மேலுார் வழியாக காரைக்குடிக்கு விஜய் வந்தார். சிவகங்கை மாவட்ட எல்லையான எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் செக் போஸ்ட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் விஜயின் வாகனத்தை சோதனை செய்தனர். விஜய் சோதனைக்கு ஒத்துழைத்தார். வேனில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விஜயின் வாகனம் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து திருப்புத்துார் வழியாக காரைக்குடிக்கு சென்றார்.

விமானத்தில் சோதனை: பவுன்சர்கள் தாக்குதல்

காரைக்குடியில் பிரசாரத்துக்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் சென்றார்.
பிரசாரத்துக்கு பின், காரைக்குடியில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். இதனால், மதுரையில் இருந்த தனி விமானம், நேற்று மதியம் 3:00 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்தது. விமான நிலையத்தில் இருந்த அந்த விமானத்தை, திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், அரை மணி நேரம் சோதனையிட்டனர். சோதனையில், எதுவும் சிக்கவில்லை
இந்நிலையில், திருச்சி விமான நிலையம் வந்த விஜயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர்களை பவுன்சர்கள் தள்ளி விட்டனர். இதனால், இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், செய்தியாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Source link