காலிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் செடிசேவா மோதினர். 56 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் வைஷ்ணவி, 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 6-2, 6-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மஸ்லென்கோவாவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 6-2, 6-2 என, ரஷ்யாவின் பர்டினா, மார்டியனோவா ஜோடியை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் சக இந்தியாவின் பெலா, சோனல் ஜோடியை சந்திக்க உள்ளது.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, நெதர்லாந்தின் ஜாஸ்மின் ஜோடி, 6-2, 5-7, 10-12 என இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடியிடம் தோற்றது.

Source link