கால்பந்து: சென்னை-மும்பை மோதல் * வெளியானது ஐ.எஸ்.எல்., உத்தேச அட்டவணை

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் உத்தேச அட்டவணை வெளியானது. சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பையை சந்திக்க உள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது. இதன் 15 ஆண்டு ஒப்பந்தம் 2025, டிச.8ல் முடிந்தது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், 12வது சீசன் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் தலையீட்டின் பேரில், ஐ.எஸ்.எல்., தொடர் வரும் பிப். 14ல் துவங்குகிறது.

இதற்கான உத்தேச அட்டவணை வெளியானது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மொத்தம் 91 போட்டிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்கும்.

பிப். 14ல் கோல்கட்டாவில் நடக்கும் முதல் போட்டியில் மோகன் பகான், கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கோவாவில் நடக்கும் மற்றொரு போட்டியில் கோவா, இன்டர் காசி அணிகள் மோத உள்ளன.

மே 17ல் அனைத்து அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதும். தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்க, இப்போட்டிகள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.

சென்னை எப்படி

ஐ.எஸ்.எல்., தொடரில் இருமுறை கோப்பை வென்ற அணி சென்னை (2015, 2017-18). இம்முறை தனது முதல் போட்டியில் பிப். 19ல் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. தவிர, சென்னையில் 7 போட்டியில் பங்கேற்க உள்ளது.

Source link