கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

சிட்னி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது ஜப்பான். நேற்று நடந்த பைனலில் 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடந்தது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்றன. லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 3 போட்டியிலும் தோற்று வெளியேறியது. நேற்று சிட்னியில் நடந்த பைனலில் ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

கடந்த 2014 (0-1), 2018 (0-1) என இரு முறை ஜப்பானிடம் பைனலில் தோற்ற ஆஸ்திரேலிய அணி, இம்முறை சொந்தமண்ணில் பதிலடி தரும் என நம்பப்பட்டது. மாறாக போட்டியின் 17 வது நிமிடத்தில் ஜப்பானின் ஹேஸ்கவா கொடுத்த பந்தை, கோல் ஏரியாவுக்கு வெளியே பெற்றார் ஹமானோ.

அப்படியே வலது காலால் உதைத்து, கோலாக மாற்றினார். ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் கடைசி 10 நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள், ஸ்கோரை சமன் செய்ய போராடினர். ஆசிய தரவரிசையில் ‘நம்பர்-1’ ஆக உள்ள ஜப்பான் அணியின் கோல் ஏரியாவை (6 போட்டி, விட்டுக் கொடுத்த கோல் 1) கடைசி வரை தகர்க்க முடியவில்லை.

முடிவில் ஜப்பான் அணி 1-0 என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. கடந்த நான்கு தொடரில் மூன்றாவது முறையாக ஜப்பான் (2014, 2018, 2026) கோப்பை வென்று அசத்தியது.

6 அணிகள் தகுதி

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் ஆன ஜப்பான், 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலியா, தவிர சீனா, தென் கொரியா, வடகொரியா, பிலிப்பைன்ஸ் அணிகள் ‘டாப்-6’ இடம் பிடித்தன. 2027, ஜூன் 24-ஜூலை 25ல் பிரேசிலில் நடக்க உள்ள ‘பிபா’ பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றன.

Source link