'காஸ்ட்லி' ராஜஸ்தான் அணி * ரூ. 15,290 கோடிக்கு விற்பனை

புதுடில்லி: ராஜஸ்தான் அணியை ரூ. 15,290 கோடிக்கு அமெரிக்காவின் கல் சொமானி குழுமம் வாங்கியது.

பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை, மும்பை உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ராஜஸ்தான் அணியை விற்பனை செய்ய, அதன் உரிமையாளர் மனோஜ் பதாலே (எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ்) முடிவு செய்தார். இதை வாங்க அமெரிக்க தொழில் அதிபர் கல் சொமானி, டைம்ஸ் இன்டர்நெட் குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், மிட்டல் குடும்பம் போட்டியிட்டன.

இறுதியில் கல் சொமானி குழுமம், ரூ. 15,290 கோடிக்கு ராஜஸ்தான் அணியை வாங்கியது. இந்த குழுமத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் ராப் வால்டன், போர்டு நிறுவனத்தின் ஷீல்ட்ஸ் ஹாம்ப் குடும்பம் பங்குதாரர்களாக உள்ளனர். 19வது தொடர் முடிந்ததும் உரிமையாளர் மாற்றம் ஏற்படும்.

அமெரிக்க தொழில் அதிபரான கல் சொமானிக்கு, கிரிக்கெட் தவிர, கோல்ப் போட்டியிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்காவின் மோட்டார் சிட்டி கோல்ப் கிளப்பின் சக உரிமையாளராக உள்ளார். ‘இன்ட்ராஎட்ஜ்’ உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

பிரிமியர் தொடர் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”கல் சொமானி நிறுவனம் ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் முதலீடு செய்திருந்தது. தற்போது பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இது, பிரிமியர் தொடரின் மதிப்பை காட்டுகிறது. 2021ல் லக்னோ அணி ரூ. 7,090 கோடிக்கு விற்பனையானது. இதை மிஞ்சிய ராஜஸ்தான், பிரிமியர் தொடர் வரலாற்றின் ‘காஸ்ட்லி’ அணியாக உருவெடுத்துள்ளது. பி.சி.சி.ஐ., அனுமதி அளித்த பின், விற்பனை ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்,”என்றார்.

பெங்களூரு அணியும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 16,760 கோடிக்கு வாங்க உள்ளது.

Source link