`கிட்னி மோசடி புகாரில் பிக்பாஸ் ஜூலி; ஆதாரங்கள் போலிஸில்.!' – அதிர்ச்சி தகவலின் பகீர் பின்னணி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலியைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள கிட்னி மோசடி புகார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கிட்னி மோசடி தொடர்பாக விசாரிக்க நியமித்த ஐ.ஜி பிரேமானந்த் சின்ஹாவிடம் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக இது தொடர்பான‌ புகாரை அளித்துள்ளனர், வழக்கறிஞர் நெல்சன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் ஆகிய இருவரும்.

இது தொடர்பாக, கார்த்திக்கிடம் பேசினோம்.

karthick

”இவ்வளவு பெரிய மோசடி புகார் நாங்க சாதாரணாமா போட்ட ஒரு வீடியோ மூலம்தான் வெளிச்சத்துக்கு வந்தது. தவெக தலைவர் விஜய் பேச்சைக் கலாய்ச்சு ஒரு வீடியோ போட்டாங்க ஜூலி. ‘ஜல்லிக்கட்டு பத்தி தப்பா பேசியிருக்கார் விஜய்’னு சொன்ன அந்த வீடியோ பார்த்ததும், வந்த ஒரு எரிச்சல்லதான் நாங்க ஒரு வீடியோ போட்டேன் நான்.

‘நீங்க தான் ஜல்லிக்கட்டுக்கு அத்தாரிட்டி மாதிரி இருக்கு உங்க பேச்சு, இந்த மாதிரியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடாதீங்க’னு அந்த வீடியோவுல பேசியிருந்தேன். அந்த வீடியோவுல கமென்ட் போட்டிருந்த ஒரு பெண் தான் முதல் தடவையா ஜூலி குறித்த அந்த பகீர் தகவலைச் சொன்னாங்க.

‘எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்களுக்கு ‘கிட்னி’ மாற்று அறுவைச் சிகிச்சைக்கு கிட்னி தேவைப்பட்டது. என்னுடைய ஃப்ரண்ட் ஒருத்தர்தான் ஜூலியையும் அவரது தோழி ஷர்மிளானு இன்னொருத்தரையும் கைகாட்டி இவங்க பண்ணித்தருவாங்க’னு சொன்னார்.

ஜூலி மற்றும் ஷர்மிளாவைச் சந்திச்சு அவங்க சொன்னபடி கேட்டோம். அந்த ஆபரேஷனும் நடந்தது. ஆனா கொஞ்ச நாள்லயே அந்த உறவினர் இறந்துட்டார்.

‘சில லட்சங்கள் செலவு செய்தோமே, என்னங்க, இப்படி’ன்னு கேட்டதுக்கு சரியான பதில் சொல்லலை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘இந்த விவகாரத்தை இத்தோட விடுங்க, ஏதாவது பிரச்னை ஆனா நீங்களும் சிக்கலைச் சந்திக்க வேண்டி வரும்’னு மிரட்டுகிற தொனியில் பேசினாங்க. அதனால அத்தோட விட்டுட்டோம்’ எனச் சொன்னார் அந்தப் பெண்மணி.

பாதிக்கப்பட்டவரே பேசினதால, ‘ஜூலிக்கு கிட்னி மோசடிக் கும்பலுடன் தொடர்பிருக்கு’ன்னு ஒரு வீடியோ போட, அதைப் பார்த்துட்டு வெளிநாட்டுல வேலை செய்து வர்ற புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டார்.

அவருடைய விஷயம் ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது.

அவருடைய அப்பாவுக்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டிருக்கு. உறவினர்கள் தந்தா ஒப்புதல் அவசியம், முன்பதிவுன்னு அரசுத் தரப்புல சில ஃபார்மாலிடிஸ் உண்டு.

ஒரு என்.ஜி.ஓ-வுடன் தொடர்புடைய ஜூலி, அந்த என்.ஜி.ஓ நடத்துற மெடிகல் கேம்ப்களுக்குப் போவாங்களாம். அந்த முகாம்கள் மூலமாத்தான் யாருக்கு கிட்னி தேவைப்படுதுங்கிற தகவல் இவங்களுக்குக் கிடைக்குது. கிட்னியை காசுக்காக விக்கிறவங்க பத்தின விபரங்கள் எப்படி தெரிஞ்சுக்கிடுறாங்க தெரியலை. நிச்சயம் பெரிய நெட்ஒர்க் இருக்கு. அப்படியொரு முகாம் தொடர்பு மூலமா புதுச்சேரி இளைஞரைப் பிடிச்சிருக்காங்க.

கிட்னி மோசடி

புதுச்சேரி இளைஞருக்கு உறவினர் தரப்புல யாரும் கிட்னி தரத் தயாரா இல்லாததால், ஜூலி அவர் தோழி ஷர்மிளா, ஜூலியை இப்ப கல்யாணம் செய்திருக்கிற அந்த இளைஞர் என எல்லாரும் சேர்ந்து ஒரு ஐடியா சொல்லியிருக்காங்க.

அதாவது ‘கிட்னி தர ஒருத்தர் தயாரா இருக்கார். அவர் உங்க உறவினர்னு சான்றிதழ் வாங்கிடலாம். ரெவன்யூ டிபார்ட்மென்ட்ல அதுக்கு ஆள் இருக்கு. பணம் செலவாகும்’னு பேசிப் பேசி அட்வான்சா ஒன்பது லட்சம் வரை வாங்கியிருக்காங்க.

ஆனா ஆபரேஷன் நடக்கறதுக்குள்ளேயே அவருடைய அப்பா இறந்துட்டார். பணத்தை திருப்பி கொடுங்கனு அந்த இளைஞர் கேட்டதுக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ணாம போக்கு காட்டி வந்திருக்குது இந்த டீம். ஆனா முதல்ல இந்த டீல் குறித்துப் பேச சென்னை வடபழனி நூறடி சாலையில் இருக்கிற பிரபல ஓட்டலின் பின்புறமுள்ள ஒரு முகவரிக்குதான் போயிருக்கார் அந்த இளைஞர்.

தன்னுடைய நண்பர்கள் சிலரை அழைச்சுகிட்டு திடீர்னு ஒருநாள் அந்த வீட்டுக்குப் போன இளைஞர், பணம் இப்ப வராட்டி மீடியா, போலீஸ்னு எல்லாரையும் கூப்பிடப் போறேன்’ எனச் சொன்னதும் ஜூலி உட்பட அங்கிருந்தவங்க பயந்திருக்காங்க. அடுத்த ஒரு மணி நேரத்துல 8 லட்சம் திருப்பித் தந்திருக்காங்க ஜூலி அன்ட் டீம்.

Big boss Julie

இந்த ரெண்டு பேரும் உதாரணங்கள். இன்னும் சிலர் இருக்காங்க. தவிர இந்த விஷயத்துல பணப் பரிமாற்றம் நடந்ததுக்கான ஆதாரம், ஜூலி சந்திச்சுப் பேசியதுக்கான எவிடென்ஸ் எல்லாமே பக்காவ இருக்கு. பாதிக்கப்பட்டவங்களுமே இந்த குரூப் மீது புகார் தரத் தயாரா இருந்ததால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்னு முடிவு செய்தோம்.

என்னுடைய நண்பர் வழக்கறிஞர் நெல்சனை அணுக அவர் சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கார்” என்கிற கார்த்திக்தான் மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த பிரேமானந்த் சின்ஹா தலைமையிலான ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமிடம் இது தொடர்பாக புகார் அளித்து ஆதாரங்களையும் அளித்திருக்கிறார்.

கார்த்திக் இந்த விஷயத்தில் தலையிட்டதும் திருச்சியிலுள்ள‌ அவரது வீட்டுக்கு போலீஸ் சென்றதாம். ‘என்ன விசாரணைன்னாலும் சட்டப்படி கூப்பிடுங்க, வர்றேன்’னு அவர் சொன்னவுடன் திரும்பி போன போலீஸ் அதன் பிறகு வரவே இல்லையாம்.

வழக்கறிஞர் நெல்சனிடம் பேசினோம்.

”தமிழ்நாட்டில் நடக்கிற கிட்னி மோசடிக்குப் பின்னாடி ஒரு பெரிய நெட் ஒர்க் இருக்கு. ஜூலி மாதிரியான நர்ஸ்கள், சில மருத்துவமனையின் மருத்துவர்கள், கிட்னி தரத் தயாரா இருக்கிறவங்க கூட டீல் பேச புரோக்கர்கள்னு நிறையப் பேர் இருக்காங்க. அதனால விசாரிக்க தனி டீம் போட்டு விசாரணையை நீதிமன்றம் கவனிக்குதுங்கிறதால நாங்க இது தொடர்பான எல்லா விபரங்களையும் அந்த ஐ ஜி க்கு அனுப்பி வச்சிருக்கோம். இப்ப தேர்தல்ங்கிறதால போலீஸ் அதுல கவனமா இருக்கலாம்.

தேர்தல் முடிஞ்சதும் அடுத்தகட்ட நடவடிக்கையை துவக்கலாம்னு இருக்கோம். தேவைப்பட்டா பாதிக்கப்பட்டவங்க பேரிலேயே வழக்கா தாக்கலும் செய்யலாம்னு இருக்கோம். இதுக்கிடையில் எங்க வீடியோ குறித்து போலீசில் புகார் தந்திருக்கும் ஜூலி இந்த விவகாரத்தில் அரசியலை இழுத்துள்ளார். இந்த புகாரின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. ஜூலிதான் தன்னைக் காப்பாத்திக்க அரசியலைத் துணைக்கு அழைக்கிராரோனு தோணுது’ என்கிறார் இவர்.

பிக்பாஸ் ஜூலி

ஜூலியிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டோம்.

போனை எடுத்த அவரது கணவர் முகமது இக்ரீம், ‘ஜூலி இது தொடர்பா பேசுவாங்க ‘ என்றார். ‘சரி அவங்ககிட்ட போனைக் கொடுங்க’ என்றதும், நான் வெளியில இருக்கேன், அவங்க இப்ப என் பக்கத்துல இல்லை’ என்றார்.

‘புகாரில் உங்க பேரும் இருக்குதே, நீங்க பேசலாமே’ என்றதற்கு, ‘எனக்கு எதுவும் தெரியாதுங்க’ என போனைக் கட் செய்து விட்டார். அவர்.

இந்த விவகாரத்தில், இவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவிட தயாராக இருக்கிறோம்.!

Source link