கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள் தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல், தமிழகம் முழுதும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழிலகம் வளாகத்தில், 33ம் நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட சங்கத்தினர், இன்றும், நாளையும், தமிழகம் முழுதும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சுகாதார ஊக்குநர்கள்

‘ஊதிய உயர்வு வழங்க வேண்டும்’ என்பது உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சுகாதார ஊக்குநர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஓட்சா’ ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், சுகாதார ஊக்குநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் உட்பட நான்கு அம்ச கோரி க்கைகளை வலியுறுத்தி, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே முற்றுகை போராட்டம் நடந்தது.

ஓட்சா கூட்டமைப்பு, ஊக்குநர்கள் அணியின் மாநிலத் தலைவர் சென்னம்மாள் தலைமை வகித்தார். போராட்டத்திற்கு தமிழகம் முழுதும் இருந்து வந்த, 800க்கும் மேற்பட்ட சுகாதார ஊக்குநர்கள் பங்கேற்றனர்.

கூட்டுறவு சங்க ஊழியர்கள்

தமிழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை:

கூட்டுறவுத் துறையின் கீழ், பல வகை சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது நிறுவன ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம், 1,617 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து வகை சங்க பணியாளர்களுக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைக்கப்பட்டு, 20 மாதங்கள் ஆகியும் ஊதிய ஆணை வழங்கப்படவில்லை. எனவே, ஊதிய உயர்வு ஆ ணையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link