ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ரன் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி தலையிட்டு தீர்த்து வைத்ததாக தெரிகிறது.
பின்னர் அன்று மாலை அதே விவகாரம் தொடர்பாக சில வாலிபர்கள் இடையே மீண்டும் விவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அப்போது கே.கிஷோர் (வயது 26) என்ற வாலிபர், போட்டி நடுவரின் சகோதரரான அஜித் (23) என்பவரை தாக்கி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அஜித் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டின் இடையே நடந்த சாதாரண பிரச்சனை வாலிபரின் உயிரைப் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புகைப்பட கலைஞரான கிஷோரை தேடி வருகிறார்கள்.
