கிரிப்டோ முதலீடுகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

கி ரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் நடைபெறும் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு, புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்தியர்கள், வெளிநாட்டு கிரிப்டோ தளங்களில் செய்யும் பரிவர்த்தனை விபரங்களை, உலக நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ள உள்ளது.

இந்த தகவல் பரிமாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ஓ.இ.சி.டி.,) தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பின் கீழ் நடைபெறும். வங்கிக் கணக்கு விவரங்கள் போலவே, கிரிப்டோ பரிவர்த்தனை விவரங்களும் வரித்துறைகளுக்கு இடையே தானாக பரிமாறப்படும்.

இதன் வாயிலாக, வெளிநாட்டு கிரிப்டோ தளங்களில் நடைபெறும் இந்தியர்களின் வர்த்தகங்களை அரசு எளிதாக கண்காணிக்க முடியும். இதற்காக, இந்தியாவில் செயல்படும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் இடைத்தரகர்களின் கண்காணிப்பும் கடுமையாக்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், கிரிப்டோ பரிவர்த்தனை விவரங்களை அரசுக்கு அளிக்க தவறினால், தினமும் 200 ரூபாய் அபராதமும், தவறான தகவல் அளித்தால் அல்லது தவறுகளை திருத்தாமல் விட்டால், நிலையான அபராதமாக 50,000 ரூபாய் விதிக்கப்படும்.

ஏற்கனவே, கிரிப்டோ லாபத்திற்கு 30 சதவீதம் வரி மற்றும் பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் டி.டி.எஸ்., வசூலிக்கப்படும் நிலையில், புதிய விதிகள் கிரிப்டோ முதலீடுகளில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் என, கிரிப்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link