கிளம்பியது புயல்! 'சபரிமலை தந்திரிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை': கோர்ட் கருத்தால் கேரள அரசு மீது பாயும் எதிர்க்கட்சிகள்

திருவனந்தபுரம்: ‘சபரிமலை தங்கம் திருடப்பட்ட வழக்கில், தந்திரி கண்டரரு ராஜீவரருவுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை’ என, கேரள மாநிலம், கொல்லம் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் மார்க். கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலை மையில் இடது ஜனநா யக முன்னணிகூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலை, கருவறை கதவுகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்ட தங்க கவசங்கள் மீது, தங்க முலாம் பூசுவதற்காக அவை கழற்றி எடுக்கப்பட்டன.

விசாரணை

பின்னர் மீண்டும் அவை பொருத்தப்படும்போது, கவசத்தில் இருந்த தங்கத்தை உருக்கி தனியே பிரித்து எடுத்து, திருடப்பட்டதாக புகார் எழுந்தது.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தங்கம் மாயமான சம்பவத்தை, இரு வழக்குகளாக பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு, விசாரணை செய்தது.

இதில், பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாகிகள், உயரதிகாரிகள் ஆகியோரும் அடுத்தடுத்து கைதாகினர்.

சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், படி பூஜைகள் செய்யும் முக்கிய தந்திரியான கண்டரரு ராஜீவரரும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அப்போது பேசப்பட்டது. 40 நாட்களுக்கு மேலாக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சூழலில், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், இவ்வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது செய்யப்பட்டதாக, கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது.

இதையடுத்து, ஆளும் இடதுசாரி ஜனாநயக முன்னணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தற்போது போர்க்கொடி துாக்கத் துவங்கி விட்டன.

இது குறித்து, பா.ஜ., மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறிய தாவது:

முன்னாள் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை காப்பாற்றுவதற்காகவே, தந்திரி மீது வீண் பழி சுமத்தப்பட்டது. நீதிமன்றம் கூட, தந்திரிக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என கூறியிருப்பதன் மூலம், ஆளுங்கட்சியின் திசை திருப்பும் முயற்சி தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

தற்போதைய தேவசம் அமைச்சர் வாசவன், முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை. சபரிமலை தங்கம் மாயமான வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த, 2018ல் சபரிமலை சு வாமி தரிசனத்துக்கு, பெண்களை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது, பினராயி அரசுக்கு எதிராக தந்திரி கண்டரரு ராஜீவரரு, சன்னிதான கதவை அடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் தான், அவரை வேண்டுமென்றே இவ்வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நடவடிக்கை

இது குறித்து காங்., மூத்த தலைவர் திருவன்சூர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தந்திரி கண்டரரு ராஜீவரருவை, இவ்வழக்கில் சிக்க வைக்க என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்.

சிறப்பு புலனாய்வு குழு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க, தந்திரியை அரசு பலிகடாவாக்கி விட்டது.

அவரை கைது செய்வதற்கு அனுமதி கொடுத்தது யார்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்? இதை, பொதுவெளியில் அரசு தெரிவிக்க வேண்டும்.

வெளியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், தந்திரியை கைது செய்துள்ளனர். அப்படி அழுத்தம் கொடுத்தவர்கள் யார், பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற தகவலை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2018ல் நடந்த போராட்டத்தின்போது, போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்கள் மலையேறி சபரிமலைக்கு வந்த போது, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மிக துணிச்சலாக, சன்னிதானத்தின் கதவுகளை அடைத்தார்.

இதனால், அவர் மீது ஆத்திரத்தில் இருந்த மாநில அரசு, பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை கைது செய்துவிட்டது என, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான ஸ்ரீதரன் பிள்ளையும் பினராயி அரசு மீது குற்றஞ்சாட்டிஉள்ளார்.

Source link