புதுடில்லி: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் 34. விக்கெட் கீப்பர் பேட்டரான இவர், 2018ல் கேப்டவுனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். 4 டெஸ்ட் (104 ரன்), 60 ஒருநாள் (2141 ரன், 4 சதம்), 58 சர்வதேச ‘டி-20’ (1000 ரன், 5 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு லாகூரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு சார்பில் வெளியான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் கிளாசன் இடம் பெறவில்லை. இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசன் அறிவித்தார்.
தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று, மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, தனது ஓய்வு முடிவில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். கிளாசன் வெளியிட்ட செய்தியில், ‘எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால், மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடும் எண்ணம் இல்லை,’ என, தெரிவித்தார்.
