தமிழக மக்களிடையே தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் செப் தாமு (72), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். தனது தனித்துவமான சமையல் திறமை, பல்வேறு சாதனைகள், இயல்பான பேச்சாற்றல் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவரது மறைவு, சமையல் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே. தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட செப் தாமு, சமையல் கலையைத் தனது தொழிலாகக் கொண்டு அதில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி சமையல் போட்டிகள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று, தனது அனுபவத்தாலும் நகைச்சுவையான அணுகுமுறையாலும் இளைய தலைமுறையினரிடமும் பிரபலமானார்.
சமையல் துறையில் தொலைக்காட்சி புகழுடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை. 2010-ஆம் ஆண்டு, தனிநபர் ஒருவர் தொடர்ந்து அதிக நேரம் சமைத்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். ஒரே நாளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து அசத்தினார். சுமார் 24 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சமையலில் ஈடுபட்டு தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்தார்.
கல்வித் துறையிலும் தனித்துவமான சாதனையைப் பதிவு செய்த செப் தாமு, 2004-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சமையல் கலையில் தொழில்முறை அனுபவத்தையும் கல்வியையும் இணைத்துச் செயல்பட்ட அவர், தமிழ் திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.
அவரது சாதனைகளைப் பாராட்டி, லண்டன் உலகத் தமிழர் அமைப்பு 2021-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. தொடர்ந்து, சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
சமையல் கலையைப் பலரிடமும் கொண்டு சேர்த்ததுடன், தொலைக்காட்சி வழியாக அதை மக்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக மாற்றியதில் செப் தாமுவின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read: புயலால் கதிகலங்கும் தமிழகம்! 3 மாவட்டங்களில் இன்று பேய் மழை பெய்யும்! Red Alert விடுத்த வானிலை மையம்!
