பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன.
கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழநதனர். 6 பேர் கண்பார்வை இழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள பயன்படுத்தப்படாத கழிப்பறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பள்ளியில் படித்து வந்த 4 வகுப்பு மாணவன் ஒருவன் கடந்த திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளான். மாணவனின் நடை மற்றும் பேச்சில் மாற்றம் இருந்ததைக் கண்ட பெற்றோர் கண்டித்து கேட்டதில் பள்ளிக் கழிப்பறையில் இருந்த மதுவை அருந்தியதை சிறுவன் ஒப்புக்கொண்டான்.
அளவுக்கு அதிகமான போதையால் மாணவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சைக்கு பிறகு அவனின் உடல்நிலை சீராகி உள்ளது.
பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமை ஆசிரியர் நடத்திய சோதனையில், 23 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் வெளிநாட்டு மது கண்டெடுக்கப்பட்டது.
பச்வாரா போலீசார் மதுவை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணிப் பழங்களுக்கு உள்ளேயும், கேஸ் சிலிண்டர்களுக்கு உள்ளேயும், ஆம்புலன்ஸ்களிலும் மது கடத்தப்படும் நிலையில், தற்போது பள்ளி வளாகங்களே மது பதுக்கும் இடங்களாக மாறியிருப்பது அம்மாநில அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த தொடர் சட்டவிரோத மது விவகாரத்தில் ஆளும் என்டிஏ கூட்டணி அரசை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
“பீகாரில் மதுவிலக்கு என்பது ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது. மது மாபியாக்களுக்கும் அரசுக்கும் இடையிலான கூட்டணியால் சுமார் ரூ.40,000 கோடி ஊழல் நடக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பீகாரில் நாளொன்றுக்கு சராசரியாக 11,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த 2016 இல் மதுவிலக்கு அமலானதில் இருந்து இதுவரை சட்டவிரோத மது தொடர்பாக 11 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 16 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மொத்தம் 5 கோடி லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளது.
