கோவை: வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் வருவாய் ஆதாரம் மற்றும் ஐந்தாண்டு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏப்.23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, பிரசாரம், வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முற்பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. அதன் பின்னர் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது, வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் வருவாய் ஆதாரம் மற்றும் ஐந்தாண்டு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் கூறியதாவது: வேட்பாளர் மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் அவரை சார்ந்த அனைவரின் ஐந்தாண்டு வருமான வரி கணக்கு விவரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி செலுத்தவில்லை என்றால், அதை குறிப்பிட வேண்டும்.குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தால், வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். ஏதேனும் வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலோ அல்லது தண்டனை பெறாமல் இருந்தாலோ அதையும் தெரிவிக்க வேண்டும்.
கையில் உள்ள ரொக்கம், வங்கி இருப்பு, முதலீடு, வாகனங்கள், தங்கம், வெள்ளி மற்றும் நிலம், வீடு விவரங்களை தெரிவிக்க வேண்டும். கப்பல், படகு, ஹெலிகாப்டர் வைத்திருந்தால் பதிவெண் உடன் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர் மற்றும் சார்ந்தோரின் வருமானம் எந்த வழியில் கிடைத்தது என்பதையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
