குடும்ப சொத்துக்காக குடுமிப்பிடி சண்டை ஜெகன் மோகன் – ஷர்மிளா டிஷ்யூம்… டிஷ்யூம்!

– நமது சிறப்பு நிருபர் –

ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது தாய் விஜயம்மா, சகோதரியும், மாநில காங்., தலைவருமான ஷர்மிளா இடையே பல கோடி ரூபாய் சொத்துக்காக குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

தகராறு

இங்கு, 2004 – 09 வரை, காங்கிரசைச் சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மு தல்வராக இருந்தார். 2009 செப்டம் பரில், ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இவரது மகன் தான், முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா; ஆந்திர காங்., தலைவராக உள்ளார்.

தந்தை மறைவுக்கு பின், குடும்ப சொத்துக்கள், தொழில்க ள் மற்றும் அரசியல் பாரம்பரியம் அனைத்தும் ஜெகன் மோகன் வசம் வந்தன.

யாரையும் வாரிசாக குறிப்பிட்டு முறையாக உயில் ஏதும் எழுதி வைக்காமல் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைந்ததால், குடும்பத்துக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயம்மா, அவரது மகளும், ஆந்திர காங்., தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஒருபுறமும், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மறுபுறமும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

விஜயம்மா சமீபத்தில், வெளியிட்ட அறிக்கையில், ‘சொத்துக்கள் குறித்து ஜெகன் மோகன் முன்வைக்கும் அனைத்து வாதங்களும் தவறானவை; திசை திருப்பக்கூடியவை.

‘சொத்துக்கள் இன்னும் முறையாக பிரிக்கப்படவில்லை. சகோதரி ஷர்மிளாவுக்கும், அவரது குழந்தைகளுக்கும் ஜெகன் மோகன் அநீதி இழைத்து விட்டார்.

‘ ஷர்மிளாவுக்கு அதிக சொத்துக்கள் கிடைக்க வேண்டும். அனைத்து சொத்துக்களும் இன்னும் குடும்பத்தின் கூட்டுக் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. ஜெகன் மோகனின் இரண்டு குழந்தைகளுக்கும், ஷர்மிளாவின் இரண்டு குழந்தைகளுக்கும் சொத்துக்களை சமமாக பகிர்ந்த ளிக்க வேண்டும்’ என, திட்ட வட்டமாக தெரிவித்தார்.

‘சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், கேபிடல் ரியாலிட்டி’ கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள எலகங்கா நிலம் ஆகியவை பிரச்னையில் உள்ளன. இதில், எலகங்கா நிலத்தின் மதிப்பு மட்டும், 300 கோடி ரூபாய் என, கூறப்படுகிறது. இது முழுமையாக ஷர்மிளாவுக்கே சொந்தம் என, விஜயம்மா தெரிவித்துள்ளார்.

இந்த சொத்துக்கள் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை கண்காணிப்பில் இருப்பதால், அவற்றை விற்பதோ அல்லது மாற்றுவதோ தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.

பின்னடைவு

எனினும், குடும்ப அழுத்தத்தாலும், அரசியல் காரணத்தாலும் சில ஆண்டுகளுக்கு முன், ஜெகன் மோகன் மற்றும் அவரது மனைவி பாரதி, சரஸ்வதி பவர் நிறுவனத்தின் பங்குகளை ஷர்மிளா மற்றும் விஜயம்மாவுக்கு, ‘பரிசு பத்திரம்’ மூலம் மாற்றி கொடுத்தனர்.

இதை செல்லாது என அறிவிக்கக் கோரி, ஜெகன் மோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பரிசு பத்திரத்தை ரத்து செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், விஜயம்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்ட, 200 கோடி ரூபாய், ‘செட்டில்மென்ட்’ அல்ல. அது நிறுவன லாபத்தின் ஒரு பகுதி’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பு ஷர்மிளாவுக்கு சாதகமாக அமைந்தால், அது ஜெகன் மோகனுக்கு அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பெரும் பின்னடைவாக அமையும்.

குடும்ப சொத்து தகராறு தற்போது அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. ஜெகன் மோகனின் ஆதரவாளர்கள், முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் திரைமறைவில் ஷர்மிளாவுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Source link