'குண்டாஸ்' கைதுக்கு பதிலாக ஜாமினை ரத்து செய்யலாம்: டி.ஜி.பி.,க்கு உத்தரவு

மதுரை: ஜாமினில் வெளிவந்ததை தவறாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கையாள குண்டர் சட்ட தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக, ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்க டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை பழனிவேல்ராஜன் என்பவர் ஒருவரை வழிமறித்து, கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி, ஆபாசமாக பேசி, அருகில் இருந்தவர்களை மிரட்டியதாக வழக்கு பதியப்பட்டது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் 2025 செப்.17ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி பழனிவேல்ராஜன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், பி.தனபால் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ்குமார்:

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் முந்தைய ஒரு வழக்கில் ஜாமினில் வெளியே இருக்கும்போது குற்றத்தில் ஈடுபட்டால், ஜாமினை ரத்து செய்யும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்கக்கூடாது. மனுதாரரை கைது செய்ததற்கான காரணங்களை குறிப்பாணையில் தெரிவிக்கவில்லை.

மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மையை கணக்கில் கொண்டாலும் கூட, அவை அப்பகுதியின் அமைதியை பாதிக்கும் அளவிற்கு இல்லை. அவை ‘பொது ஒழுங்கு’ எனும் வரம்பிற்குள் வராது. அதிகபட்சமாக, அக்குற்றச்சாட்டுகள் ‘சட்டம்- ஒழுங்கு’ பிரச்னையாக மட்டுமே கருதப்படக்கூடும். தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்க அவசியம் எழவில்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர்:

ஜாமினை ரத்து செய்ய மனு செய்யவில்லை என்ற ஒரு காரணத்திற்காக தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய வழக்கில் சம்பவத்தின் தன்மையானது, அப்பகுதியின் அமைதி, பொது ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்தது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் செயல் அப்பகுதியில் அமைதி அல்லது சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இல்லை. அதிகபட்சமாக சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கலாம். நிச்சயமாக பொது அமைதியை பாதிக்கும் வகையில் இல்லை. இச்சூழ்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. மனுதாரருக்கு எதிரான கைது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

ஜாமினில் வெளிவந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கையாள குண்டர் சட்ட தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் இந்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க உள்ளது. இதில் தற்போதைய நிலை குறித்து டி.ஜி.பி., ஏப்.7 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Source link