கட்டுரை தகவல்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் இரான், ஓமன் போன்ற நாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக அங்குள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் இணைந்து முதல் கட்டமாக இரானில் தவித்து வந்த 345 தமிழக மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அப்படி தமிழகம் வந்த சில மீனவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
“எனக்கு இது மறு ஜென்மம்”
போருக்கு மத்தியில் இரானில் இருந்து சொந்த ஊர் வந்தது “மறு ஜென்மம் போல்” இருப்பதாக கூறுகிறார், இந்தியா திரும்பிய மீனவர் ராஜேந்திரன்.
இது குறித்து பேசியவர், “கடலில் மீன்பிடி தொழில் செய்துவிட்டு கீஷ் தீவில் (Kish Island) தங்கி இருந்ததால் ஆரம்பத்தில் போர் குறித்து எந்த அச்சமும் இல்லை. ஆனால், நாளடைவில் போர் தீவிரமடைந்து குண்டுகள் தரையில் விழுவதன் அதிர்வை உணரும் போது தான் போர் தீவிரம் தெரிய வந்தது. போர் காரணமாக அங்கு தங்கியிருந்த 40 நாட்களும் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தோம்.” என்றார்.
“கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீஷ் தீவில் தங்கி இருந்த மீனவர்களை படகின் உரிமையாளர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு செய்திருப்பதாக கூறினார்” எனக் கூறும் ராஜேந்திரன், “ஏழு பேருந்துகளில் தலா 42 மீனவர்கள் என சுமார் 294 மீனவர்களை கோம் (Qom) என்ற பகுதிக்கு இரண்டு நாள் பயணமாக அனுப்பி வைத்தனர். கீஷ் தீவில் இருந்து இரானின் பிரதான நிலப்பகுதிக்கு படகில் வந்த பின்னர் கோம் பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்வதற்கான செலவை படகு உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.” என்றார்.
இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்ததால் பேருந்தில் அச்சத்துடன் இரண்டு நாட்கள் பயணித்துச் சென்றதாகவும் கடல் உள்ளிட்ட பகுதியில் மட்டுமே அதீத தாக்குதல் இருந்ததால் தங்களை மலைப்பகுதி வழியாக இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று இந்திய அரசு சார்பில் கோமில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்து உணவளித்ததாகவும் கூறினார்.
“அங்கிருந்து மீண்டும் எங்களை பேருந்து மூலம் ஒரு நாள் பயணமாக இரான் எல்லை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆர்மீனியா அழைத்துச் செல்லப்பட்டு இந்திய அரசின் செலவில் விசா விமான டிக்கெட் எடுத்து யெரவான் (Yerevan) விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.” என்றார்.
கிஷ் தீவில் இருந்த நாட்களில் கண்முன்னே தாக்குதல்கள் நடந்ததாக அவர் நினைவு கூர்ந்தார், “நாங்கள் கிஷ் தீவிலிருந்து புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் தாக்குதல் அதிகமாக அப்பகுதியில் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. நாங்கள் தங்கியிருந்ததற்கு அருகே உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர், எங்கள் கண்முன்னே பல மீன்பிடி படகுகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் படகுகள் எரிந்து கடலுக்குள் மூழ்கின. இதனால் உயிர் பயத்தில் இருந்த எங்களை பேருந்து மூலம் கோம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றது பெரும் நிம்மதியை தந்தது.” என்கிறார் மீனவர் ராஜேந்திரன்.
தங்களுடன் பேருந்தில் அழைத்து வரப்பட்ட மேலும் 200க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கோம் என்ற இடத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் விரைந்து இந்தியா அழைத்து வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“கனவில் நடந்ததை போல் உள்ளது”
மீனவர் செல்வம் என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கிஷ் தீவில் தங்கியிருந்தபோது போர் தீவிரமடைந்த உடன் முதலில் எங்களுடைய படகின் உரிமையாளர் நீங்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விடுங்கள் என்றவுடன் எங்களுக்குக் கூடுதல் பதற்றம் ஏற்பட்டது. மீனவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேர்முக உதவியாளரை தொடர்புகொண்டு எங்களை உடனடியாக மீட்கும்படி கேட்டோம். தொடர்ந்து நாகர்கோவில் எம்பி விஜய் வசந்த், அப்பாவு எம்எல்ஏ உள்ளிட்டவர்களையும் நாங்கள் தொடர்புகொண்டு எங்களது குடும்பத்தினர் மூலமாக அழுத்தம் கொடுத்ததன் பெயரால் இரானில் உள்ள இந்திய தூதரகம் எங்களை தொடர்புகொண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.” என்றார் செல்வம்.
இந்திய தூதரகத்தில் இருந்து எங்களை தொடர்புகொண்டவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதால் தங்களால் அவர்களிடம் மொழி பிரச்னை காரணமாக பேச முடியாமல் இருந்த நிலையில், எங்களது குடும்பத்தினர் டெல்லி அதிகாரிகளிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழில் பேசுவதற்கு ஒரு நபரை இந்திய தூதரகத்தில் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார். அவர் தமிழில் பேசி தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“கீஷ் தீவிலிருந்து கோம் என்ற பகுதிக்கு அழைத்து வருவதற்கான பேருந்து கட்டணத்தை எங்களுடைய படகின் உரிமையாளர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஆர்மீனியா பகுதியில் உள்ள யெரவான் விமான நிலையத்துக்கு செல்ல கட்டணத்தை நாங்கள் செலுத்த வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்தது எங்கள் குடும்பத்தினர் இங்கு பணத்தை ஏற்பாடு செய்து எங்களுடைய முதலாளிக்கு அதை அனுப்பி வைத்தனர்.
எங்களிடம் டாலர்களில் வழங்கினர். ஆனால், கோம் பகுதிக்கு வந்தடைந்த பின்னர் எங்களுக்கு அந்த பணத்தை இந்திய அரசே செலுத்தும் என கூறினார்கள். எங்களிடம் எந்த பணமும் வாங்கவில்லை. முதல்கட்டமாக, நாங்கள் 347 பேர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தோம்.” என்றார்.
தங்களைப் போல் இன்னும் 350 பேருக்கு மேல் ஆர்மீனியாவில் தங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் காலக்கெடு விதித்த சமயத்தில் தாக்குதல்கள் குறைந்திருந்த நிலையில், அதனை பயன்படுத்தி இந்திய அரசாங்க உதவியுடன் உடனடியாக இந்தியா வந்து சேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
“எங்களை கீஷ் தீவில் இருந்து பேருந்தில் அழைத்து வந்த வழியில் குண்டுகள் வீசப்பட்டதில் வீடுகள் கட்டடம் பல சேதமடைந்து இருந்ததை பார்த்தோம். எங்களை பத்திரமாக கோம் பகுதிக்கு அழைத்து வந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். நாங்கள் சொந்த ஊர் வந்தது கனவில் நடந்தது போல் இருக்கிறது” என்று கூறுகிறார் இந்தியா திரும்பிய மீனவர் செல்வம்.
“மீண்டும் இரானுக்கு செல்ல மாட்டேன்”
தீவில் இருந்து அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே பெரிய மசூதி ஒன்று இருந்ததால் தாங்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக கூறுகிறார் மீனவர் தத்தியூஸ்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், “கீஷ் தீவில் இருந்து மிகவும் பதற்றமான மனநிலையுடன் இரண்டு நாள் பயணித்து கோம் என்ற பகுதியை வந்தடைந்தோம் அங்கு ஒரு விடுதியில் எங்களை தங்க வைத்திருந்தனர். நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் குண்டுகள் வீசப்பட்டு தரையில் விழுந்து அதன் அதிர்வை நாங்கள் உணர்ந்தோம்.” என்கிறார்.
மேலும், “நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு அருகே பெரிய மசூதி இருப்பதால், இது மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் இங்கு உங்களை தங்க வைத்திருப்பதாகவும் இங்கு தாக்குதல் நடைபெறாது என இந்திய தூதரகம் சார்பில் எங்களிடம் கூறியதால் மன நிம்மதியுடன் இருந்தோம்.” என்கிறார். இருப்பினும், இரவு நேரங்களில் அச்சம் திரும்பி விடும் என கூறும் அவர், “எப்போது தலையில் குண்டு விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் தங்கி இருந்தோம்” என்கிறார்.
அங்கிருந்து விமானம் மூலம் எங்களை சென்னை அனுப்பி வைத்தனர். என்னுடைய முதலாளி என்னுடன் தொடர்பில் இருந்தார். நான் சொந்த ஊர் வந்து சேர்ந்த பிறகு கூட என்னை தொலைபேசியில் என் முதலாளி தொடர்புகொண்டு விசாரித்தார்.
என்னுடைய முதலாளி வைத்திருந்த படகுகள் சாரக் என்ற பகுதிக்கு கொண்டு போய் நிறுத்தி வைக்கப்பட்டன. அங்கு மூன்று நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த என் முதலாளிக்கு சொந்தமான படகுகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசமாகி கடலில் மூழ்கின.” என்றார்.
தாக்குதலுக்குள்ளான படகில் தாங்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்ததாக கூறிய அவர், அப்படகு மூன்று நாட்களுக்கு முன் தாக்குதலுக்குள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கால தாமதமாக இந்தியா திரும்பி இருந்தால் தாக்குதலுக்குள்ளான படகில் இருந்த தாங்களும் உயிரிழந்திருப்போம் என்றும் தெரிவித்தார்.
“போர் முடிந்தாலும் என்னை மீண்டும் இரான் அனுப்ப எனது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனக்கும் மீண்டும் இரான் செல்ல மனமில்லை” என்றார் மீனவர் தத்தியூஸ்.
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…
“உடனடியாக உதவுங்கள்”
கீஷ் தீவில் இருந்து மீட்கப்பட்டு இரானின் எல்லை பகுதியான ஜல்ஃபா (Jolfa) பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜீவ் பிபிசி தமிழிடன் பேசுகையில், “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கீஷ் தீவிலிருந்து எங்களை பேருந்தில் அழைத்து வந்து ஜல்ஃபா என்ற பகுதியில் தங்க வைத்துள்ளனர். இங்கு கொடுக்கும் உணவால் பலரும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கு தங்கி உள்ளவர்களை தமிழகம் அழைத்து செல்வதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
அரசு கூறுவது என்ன?
தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், ” இரான் நாட்டில் இருந்து இதுவரை 345 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம் சார்பில் மேலும் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டு இரண்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.
மேலும், “இந்திய தூதரகம் சார்பில் விடுதிகளில் தங்கி வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் அளித்துள்ளோம் எனவே அவர்களை உடனடியாகவே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூதரகம் கூறியுள்ளது” என தெரிவித்தார்
படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? – பகிர இங்கே கிளிக் செய்யவும்Get in touch
பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
