கேரளாவைப் போன்று தேசிய கட்சிகள் பலமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. மத அடிப்படையிலான அரசியல் நிலவும் மாவட்டம். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என ஆறு சட்டசபை தொகுதிகள் குமரி மாவட்டத்தில் உள்ளன.
தற்போது கன்னியாகுமரி அ.தி.மு.க வசமும், நாகர்கோவில் பா.ஜ.க வசமும், பத்மநாபபுரம் தி.மு.க வசமும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி
முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை, சர்வதேசச் சுற்றுலாத்தலம் என முக்கியப் பல அம்சங்களை உள்ளடக்கியது கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி. விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலா ஆகியவை பலரது வாழ்வாதாரமாக இருக்கின்றன. கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் உள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் மீண்டும் தளவாய்சுந்தரம் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி கடந்த தேர்தலைப்போன்று தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை போட்டியிட்ட ஆஸ்டின் இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
தாமரை பாரதி, ஒன்றிய செயலாளர் பாபு, வழக்கறிஞர் அணி சரவணன், இளைஞரணி அகஸ்தீசன் என பலரும் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதுகின்றனர்.
நா.த.க சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொகுதியில், மீனவர்கள், இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்கள், வெள்ளாளர்கள், பட்டியலின மக்கள் பரவலாக இருக்கின்றனர். புதியதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு, மீனவர்கள் தரப்பில் வரவேற்பு காணப்படுகிறது. எனினும் மீனவ கிராமங்கள் தவிர்த்து இந்த ஆதரவு மற்ற சமூக மக்களிடம் பெரிய அளவில் இல்லாதது அவர்களுக்கு மைனஸ்.
காங்கிரஸுடனான கூட்டணி, தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதியில் பலம். அதேசமயம், அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க கூட்டணி பலமாக இருக்கிறது. எனவே இங்கு தற்போதைய நிலவரப்படி, தி.மு.க – அ.தி.மு.க இடையே போட்டி கடுமையாகவே நிலவுகிறது!
