குமரி: 6 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிக்கு 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! | Election machine will travel 125 km for six voters in kumari

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ​குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் அதிக மலைக்கிராமங்களை உள்ளடக்கியது பத்மநாபபுரம் தொகுதி. மலைக் கிராமங்களில் வசிக்கும் காணி சமூக மக்கள் வாக்களிக்க வசதியாக மலைக்கிராமங்களில் சிலவற்றில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். மலைக்கிராமமான அப்பர் கோதையாறு பகுதியில் நீர் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்ஜினீயர்கள், ஊழியர்கள் சிலர் பணிசெய்து வருகின்றனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு நடத்துவது வழக்கம். பத்மநாபபுரம் தொகுதியின் 1-வது வரிசை எண்ணைக் கொண்ட வாக்குச்சாவடி இதுதான்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை வழியாக இந்த வாக்குச்சாவடிக்குச் சென்றால் நாகர்கோவிலில் இருந்து 50 கி.மீ. தூரத்தை கடந்தால் அங்கு சென்று விடலாம். ஆனால், கோதையாற்றில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் செல்ல முடியாது. மின்வாரிய ஊழியர்கள் செல்வதற்காக விஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ச் வழியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்வது சிரமம். அதிலும் ஒரு விஞ்சில் இருந்து மற்றொரு விஞ்சுக்கு மாறி மாறி செல்லும் நிலையும் ஏற்படும். வாக்குப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரங்களை விஞ்ச் வழியாக இரவில் எடுத்துவர முடியாது. எனவே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகனங்கள் செல்லும் பாதை வரை வாக்குப்பெட்டி, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வார்கள். பின்னர் அங்கிருந்து கழுதைகளில் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

Source link