கர்கோவுன்:மஹா கும்பமேளா புகழ் மோனாலிசா 18 வயதுக்கு உட்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது மத்திய பிரதேச போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2024ல், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளா மூலம் பிரபலமானவர் மோனாலிசா போஸ்லே. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பொருட்களை விற்று வந்தார்.
வசீகரிக்கும் அழகால் அனைவரையும் ஈர்த்த அவருக்கு, விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த மாதம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்புக்கு வந்த இவர், அங்குள்ள கோவிலில் காதலன் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார். கணவர் பர்மான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் மோனாலிசாவின் திருமணம், ‘லவ் ஜிஹாத்’ என கூறப்பட்டது.
ஹிந்து பெண்களை ஏமாற்றி முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் செய்து கட்டாய மதமாற்றம் செய்யும், ‘லவ் ஜிஹாத்’ விமர்சனத்தை மோனாலிசா மறுத்தார்.
இந்நிலையில், மோனாலிசாவுக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேசிய பழங்குடியினர் கமிஷனின் பதிவேட்டின்படி, அவர், 2009. டிச., 30ல் பிறந்துள்ளார். ஆனால், திருமணம் நடந்த கோவிலில், 2008, ஜன., 1ல் பிறந்ததாக போலி ஆவணத்தை அவர் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்ததாக, மோனாலிசாவின் கணவர் பர்மான் கான் மீது மத்திய பிரதேச போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது மோனாலிசா தம்பதி கேரளாவின் கொச்சியில் வசித்து வருவதால், கைது நடவடிக்கை தொடர்பாக, கேரள போலீசாருடன், ம.பி., போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மோனாலிசாவுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக தேசிய பழங்குடியினர் கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கேரளா மற்றும் மத்திய பிரதேச டி.ஜி.பி.,க்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
