கும்பம்: `விலகப்போகும் சனி… வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இந்த ராசியினரிடம் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது. உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி?

வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 கும்ப ராசிபலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்

1. கும்ப ராசிக்காரர்களுக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் ஜென்மச்சனி விலகுகிறது. 24.4.2028 வரையிலும் பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். அவர் ஆட்சிபெற்று வலுவாக அமர்வதால், மனதில் சாந்தம் பிறக்கும்; வீண் பயம் அகலும். வற்றிய பணப்பை நிரம்பும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும்.

2. உங்களின் பழக்கங்களை நல்லமுறையில் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் விலகும். எனினும், உணவு பழக்க வழக்கங்களில் அலட்சியம் வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும்.

3. பொதுவெளியில் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண் டாம். எதன் பொருட்டும் எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவும் வேண்டாம். முக்கியமான பெரிய விஷயங்களைக் கையில் எடுக்கும் போது, வீட்டுப்பெரியவர்களின் – அனுபவசாலிகளின் ஆலோசனை களைப் பெறுவது நல்லது.

4. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலமான 6.03.2026 முதல் 2.4.2026 வரை, எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியே. பணம் வரும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் வீடு வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும்; கவலைகள் தீரும்.

சனி பகவான்

5. அதேபோல், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால், புதுப் பதவிகள் தேடி வரும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

6. சனி வக்ரத்தில் செல்லும் காலத்தில் நிதானம் அவசியம். அதாவது, 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். முன்கோபத்தைத் தவிருங்கள். பணவரவு ஓரளவு இருக்கும்.

7. இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4, 8 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும்.

8. ஒருசிலருக்கு திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்டர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். எனினும், திடீர் பண வரவு உண்டு. வீடு-மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் கூச்சல்-குழப்பங்கள் விலகும்; சந்தோஷம் பெருகும். கணவரின் அலுப்பும் சலிப்பும் நீங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும்.

10. வியாபாரத்தில், அதிரடியான மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய முதலீடுகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சந்தையின் சூழலை அறிந்து செயல்பட்டால், இரட்டிப்பு லாபம் உண்டு.

11. உத்தியோகத்தில், எதிர்பார்த்தபடி முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். புதிய பதவிகளுக்கு உங்களின் பெயர் பரிந்துரைக்கப் பட வாய்ப்பு உண்டு. மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். எனினும், அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம்.

Source link