குவாலியர்:‘கோன் பனேகா குரோர்பதி’ ‘டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 50 லட்சம் ரூபாய் பரிசு வென்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் தாசில்தார், 2.50 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
ம.பி.,யின் சியோபூர் மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில் தாசில்தாராக இருப்பவர் அமிதா சிங் தோமர்.இவர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய, ‘டிவி’ நிகழ்ச்சியான, கோன் பனேகா குரோர்பதியில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்து 50 லட்சம் ரூபாய் பரிசு வென்றவர். இதன் மூலம், அமிதா சிங் தோமர் நாடு முழுதும் பிரபலமடைந்தார். இவர், கடந்த 2021ம் ஆண்டில் பரோடா தாலுகாவில் பணியாற்றினார். அப்போது, அங்கு வெள்ள நிவாரணம் வழங்கியதில், 2.50 கோடி ரூபாயை போலி வங்கி கணக்குகளில் வரவு வைத்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், அமிதா சிங்கை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரை, கடந்த 25ல் விஜய்பூர் தாசில்தார் பதவியில் இருந்து நீக்கி கலெக்டர் அர்பித் வர்மா உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட அமிதா சிங், சிவ்புரி சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதை தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக வருவாய் இன்ஸ்பெக்டர்கள் 22 பேர் மற்றும் ஒரு தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
