தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. அதேபோல் தேர்தல் பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களை இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு நேர கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை ஒரு புறத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்ததாக வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உறங்கிக் கொண்டிருந்த நிலையில் செல்போனில் வீடியோ எடுப்பதை அறிந்து தூக்கத்திலிருந்து எழுந்த அதிகாரி வீடியோ எடுக்க வேண்டாம் என சைகை காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
