குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாரியம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை:’மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்’ என்றழைக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க தனி வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கண்ணன் கூறியதாவது:

விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு கொடுப்பது குறுந்தொழில் நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்கள் 100ல் 80 சதவீதம் வாடகை இடத்தில்தான் இயங்கி வருகின்றன.

பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு தேவையான பொருட்கள், சேவைகளை குறுந்தொழில் நிறுவனங்கள் தான் செய்து கொடுக்கின்றன. ஆனால், இவற்றுக்கு சொந்த இடம் இல்லை.

இது சம்பந்தமாக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். மும்பையில் உள்ளதுபோல் ‘போர்ஜிங் யூனிட்’ அடுக்குமாடி வடிவில் அமைக்க அரசு முயற்சி எடுத்தது. அது வும் அப்படியே நிற்கிறது.

வெல்டிங் மிஷின், உதிரி பாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்களை நடத்தி வரும் குறுந்தொழிலில் உள்ளோர், 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்கலாம் என்று அரசு சொல்கிறது. ஆனால், இதில் உள்ள பெரும்பான்மையோர் 5 லட்சம் ரூபாயில்தான் தொழிலை துவங்குகின்றனர்.

அம்பத்துாரில் 1,000 சதுரடி நிலத்தை 64 லட்சம் ரூபாய்க்கு அரசு விற்பனை செய்கிறது. இவ்வளவு பெரிய தொகையில் வாங்கும் சக்தி குறுந்தொழில் செய்வோரிடம் இல்லை.

குறுந்தொழில் செய்வோருக்கு 5 முதல் 10 சென்ட் நிலம் தேவைப்படும். இதை சிட்கோ, டிட்கோ போன்ற இடங்களில் கொடுத்தால் வங்கியில் கடன் வாங்க முடியும். அதற்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க வர்த்தகர்களுக்கு நல வாரியம் அமைத்ததுபோல், குறுந்தொழிலுக்கான வாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

* தமிழகத்தில், 40 – 50 லட்சம் நிறுவனங்கள் உள்ளன.

*இவற்றில் 80% குறுந்தொழில் நிறுவனங்கள்.

Source link