குளிர்கால பாராலிம்பிக்: சீனா முதலிடம்

மிலன்: இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 612 பேர் பங்கேற்றனர். பாரா ஐஸ் ஹாக்கி, பாரா ஆல்பைன் பனிச்சறுக்கு உள்ளிட்ட 6 வகையான விளையாட்டிகளில், 79 தங்கம் வழங்கப்பட்டது. 15 தங்கம் உட்பட 44 பதக்கம் கைப்பற்றிய சீனா முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த இரு இடங்களை அமெரிக்கா (13 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்), ரஷ்யா (8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம்) தட்டிச் சென்றன.

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அபாரம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் ‘லா லிகா’ கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என, எல்சே அணியை வென்றது. 70 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ரியல் மாட்ரிட் அணி (66 புள்ளி) 2வது இடத்தில் உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி 4வது சீசன் (ஜூன் 15-21) நடக்கவுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிலி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

* பெங்களூருவில், வரும் ஏப். 26ல் நடக்கவுள்ள ‘வேர்ல்டு 10கே’ மாரத்தான் ஓட்டத்தில் உகாண்டாவின் ஹார்பர்ட் கிபெட், எத்தியோபியாவின் முக்தர் எட்ரிஸ் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

* பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. தோள்பட்டை காயத்தால் இந்திய வீரர் பிரனாய் விலகினார். இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜ், தருண், ஆயுஷ் ஷெட்டி, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* கடந்த மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவின் அருந்ததி ரெட்டி இடம் பெற்றுள்ளார்.

Source link