'குளுகுளு' குளிர்கால ஒலிம்பிக் * ரவுண்ட் அப்

மிலன்: இத்தாலியின் மிலன் கோர்டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி (பிப்.6-22), 22,000 சதுர கி.மீ., பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச் சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி கூறுகையில், ”ஒலிம்பிக் போட்டிக்கான திட்டங்களில் விரைவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குளிர்கால ஒலிம்பிக், இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்,” என்றார்.

அணி மாறிய பென்சிமா

ரியாத்: சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கால்பந்து கிளப் அணியில் பிரான்சின் நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா இணைந்தார். அல்- இடிஹாத் அணியில் இருந்து விலகினார். இதனால் அல்- நாசர் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது சவுதி புரோ லீக் தொடரில் அல்- ஹிலால் அணி முதலிடத்தில் (47 புள்ளி) நீடிக்கிறது. அடுத்த இடத்தில் அல் -நாசர் (46) அணி உள்ளது. பென்சிமா வருகையால் அல்-ஹிலால் அணியின் ஆதிக்கம் தொடரலாம்.

* சர்வதேச டென்னிஸ் தரவரிசை, இரட்டையர் பட்டியலில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 2 இடம் முன்னேறி, 20 வது இடம் பெற்றார். போபண்ணாவுக்குப் பின், டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் ‘டாப்-20’ பட்டியலில் இடம் பெற்ற இந்திய வீரர் ஆனார் யூகி பாம்ப்ரி.

* ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நேற்று சீனாவில் துவங்கியது. ஆண்கள் பிரிவில் சீனா அணி 5-0 என மக்காவை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் ஜப்பான் அணி 5-0 என, ஹாங்காங்கை சாய்த்தது.

* டில்லியில் வரும் 2027ல் ஆசிய ரைபிள்/பிஸ்டல் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் 8 வீரர், வீராங்கனைகள், 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.

* 2026ம் ஆண்டின் முதல் மல்யுத்த ‘ரேங்கிங்’ தொடர், குரோஷியாவின் ஜாக்ரெப்பில் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் அமன் ஷெராவத், சுஜீத், அன்டிம் உட்பட 41 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது.

* ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் இன்று சீனாவின் ஹைய்கோவ் நகரில் துவங்குகிறது. பெண்கள் ஒற்றையரில் மணிகா பத்ரா, ஸ்வஸ்திகா, ஆண்கள் ஒற்றையரில் அன்குர் பட்டாச்சார்ஜீ, ஸ்னேஹித், ஆகாஷ் இடம் பெற்ற அணிக களமிறங்குகிறது.

* நார்வேயின் ஆஸ்லோவில் சர்வதேச செஸ் தொடர் வரும் மே 25-ஜூன் 5ல் நடக்க உள்ளது. இதில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் பங்கேற்க உள்ளார்.

Source link