குழந்தைகளுக்கான 'பாராசிட்டமால் சிரப்': அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு

சென்னை: தமிழக அரசு மருத்துவ மனைகளில், 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ‘பாராசிட்டமால் சிரப்’ மருந்துக்கு பதிலாக, மாத்திரை வழங்குவதால், பெற்றோர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுக்கு , 9 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. குழந்தை பிறந்தது முதல், 16 வயது வரை, 11 வகையிலான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குறிப்பாக, குழந்தை பிறந்தவுடன் காசநோய், போலியோ சொட்டு மருந்து, மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், தட்டம்மை ரூபெல்லா, ரண ஜன்னி தொண்டை அடைப்பான் நோய்களுக்கான தடுப்பூசிகளும், வெவ்வேறு காலக்கட்டங்களில் செலுத்தப்படுகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது.

அறிவுறுத்தல்

இதை தவிர்க்க, தடுப்பூசி போடும் குழந்தைகளுக்கு, திரவ வகையிலான, ‘பாராசிட்டமால் சிரப்’ வழங்கப்படுகிறது. இதில், 60 சதவீத குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதன் பக்கவிளைவாக காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில், ‘சிரப்’க்கு பதிலாக, ஒரு பாராசிட்டமால் மாத்திரையை வழங்குகின்றனர். அவற்றை நான்காக உடைத்து, குழந்தைகளுக்கு தண்ணீரில் கரைத்து கொடுக்குமாறு அறிவுறுத்து கின்றனர்.

கிராமப்புறங்களில் மட்டுமே, ‘சிரப்’க்கு பதிலாக மாத்திரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையிலும் ‘சிரப்’ மருந்துகளுக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவொற்றியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று மாத குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால், காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான பாராசிட்டமால், ‘சிரப்’க்கு பதிலாக, ஒரு மாத்திரை வழங்கியதுடன், நான்காக உடைத்து தண்ணீரில் கரைத்து குழந்தைக்கு வழங்கும்படி, செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை

அதேபோல், மாத்திரையை சிரமப்பட்டு உடைத்து, குழந்தைக்கு வழங்கிய பின்னும், காய்ச்சலால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், ”குழந்தைகளுக்கு சிரப் மருந்துக்கு பதில் மாத்திரை வழங்கியது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Source link