குவஹாத்தி: “அசாமில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, ஆண்டுக்கு 150 கோடி ரூபாயை கொள்ளையடித்தது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று சென்றார்.
அங்கு, 2,092 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்ததுடன், மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். குவஹாத்தி பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 675 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
அசாமில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., மக்கள் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை. ஒரு குடும்பத்தின் நலனுக்காகவே அக்கட்சி உழைத்தது. ஆட்சியில் இருந்து போது, சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ஆண்டுக்கு, 150 கோடி ரூபாயை காங்., கொள்ளையடித்தது.
அக்கட்சியின் எம்.பி., ராகுல், பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக கூறி நாட்டை அவமதித்து வருகிறார். அவரது நடவடிக்கைகளை எந்தவொரு இந்தியரும் ஆதரிக்க மாட்டார்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அவை எல்லாம் முறைப்படி நடந்தன. ஆனால், டில்லி செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும், பார்லி., வளாகத்திலும் முறையற்ற முறையில் காங்., போராட்டங்களை நடத்தியது. பார்லி., என்பது ஜனநாயகத்தின் புனிதமான கோவில். அதன் படிக்கட்டுகளை தர்ணாவுக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அங்கே அமர்ந்து தேநீர் மற்றும் பக்கோடா சாப்பிடுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
