குவாரி எனச்சொல்லி 40 அடி தோண்டி மண் கொள்ளை: திருவள்ளூரில் ஆளுங்கட்சி பிரமுகர் துணிச்சல்

– நமது நிருபர் –

திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், 1.47 ஏக்கர் நிலத்தில் கிராவல் குவாரிக்கு அனுமதி பெற்ற தி.மு.க., பிரமுகர், 14 ஏக்கர் விவசாய நிலத்தையும் வளைத்து, 40 அடி ஆழம் வரை தோண்டி, மணல் கொள்ளை நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. அத்துமீறலை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் உடந்தையாகிவிட்டதாக, அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், ‘385 பி, சி’ என்ற சர்வே எண்களில், 1.47 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

சுற்றி வளைப்பு

இந்த நிலத்தில், கிராவல் மண் குவாரிக்கு, அப்பகுதி தி.மு.க., பிரமுகர் ஒருவர், கடந்தாண்டு செப்டம்பரில், மாவட்ட கனிமவள துறையிடம் அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து கிராவல் மண் எடுத்து விற்க துவங்கினர். அனுமதி பெற்ற இடம் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள அரசு மற்றும் கிராம விவசாயிகளின், 14 ஏக்கர் நிலத்தை, அக்கும்பல் சுற்றி வளைத்துள்ளது.

விதிமுறைப்படி, 3 மீட்டர் ஆழம், அதாவது, 10 அடி ஆழத்திற்குள்தான் கிராவல் மண் எடுக்க வேண்டும். ஆனால், பொக்லைன் இயந்திரம்தான் இருக்கிறதே என்ற எண்ணத்தில், 40 அடி ஆழம் வரை மண் கொள்ளை நடந்துள்ளது. இதன் மூலம், அக்கும்பல் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மண் கொள்ளை குறித்து, திருவள்ளூர் கலெக்டர், கனிமவளம், காவல், வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம், மூன்று மாதங்களாக கிராம மக்கள் புகார் அளித்தும் பயனில்லை.

குவாரி நடத்துவது ஆளுங்கட்சிக்காரர் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர். தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், குவாரியில் மண் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி தாக்குதல், நெருக்கடி இருக்காது என்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் குவாரியை நேற்று பார்வையிட்டனர்.

சுரங்கம்

அங்கு, அதிகப்படியாக மண் அள்ளப்பட்டு விவசாய நிலங்கள், சுரங்கம் போல் மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, காவேரிராஜபுரம் கிராம விவசாயிகள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் நெல், பூ, சிறுதானியங்கள் என, 500 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, இங்குள்ள நிலங்களில், 40 அடிக்கு மண் அள்ளப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மண் கொள்ளையர்களுடன், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கைகோர்த்துள்ளனர். எந்த துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. எங்கள் வேதனை யாருக்கும் புரிவதில்லை.

ஆளுங்கட்சி பிரமுகர் என்பதாலும், வேண்டியது கிடைப்பதாலும், அதிகாரிகளும் சலாம் போட்டு வந்துள்ளனர். எனவே, மண் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் தொடர வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link